எனக்கு மன வலிமை தந்தார் கருணாநிதி: ஜெ. புகழாரம்
சென்னை:
பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் போட்டதால்தான் என்னால் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய அளவுக்கு மனோ பலமும், மக்கள் பலமும் கிடைத்தது. இதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி கூறிக் கொள்வதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
முன்னதாக கூட்டத்தில் பேசிய பெரும்பாலானவர்கள் சொல்லி வைத்தது மாதிரியே அம்மா, நீங்கள் பிரதமராக வேண்டும் என்று பேசினர். தேசிய அளவில் உங்கள் தலைமையில் மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சொன்ன இன்னொரு முக்கிய கருத்து அதிகாரிகள் குறித்தது. அம்மா, எங்களை மதிக்க மாட்டீங்கிறாங்க, சிபாரிசுக்கு போனா விரட்ராங்க என்பது தான்.
சசிகலா, அம்பிகா பங்கேற்பு:
கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் சசிகலாவும், நடிகை அம்பிகாவும் கூட கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பேச்சு:
நிர்வாகிகள் பேசி முடித்த பின் பேசிய ஜெயலலிதா பேசியதாவது:
தேசிய அரசியலுக்கு நான் போக வேண்டும். பிரதமராக வேண்டும் என இங்கு பேசிய பலரும் வற்புறுத்தினார்கள். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் உடனடியாக எப்படிப் போக முடியும். தமிழகத்தை வளர்ச்சியான மாநிலமாக்குவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். மக்களுக்காக நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன். இந்த நேரமே போதவில்லை.
அது நல்லபடியாக நடந்தால்தான் தேசிய அரசியலுக்குப் போவது சரியாக இருக்கும். எனவே அரசின் வளர்ச்சித் திட்டங்கள் நல்லபடியாக நிறைவேற நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் சென்னை வந்தபோது கனவு காணுங்கள், வெற்றி கிடைக்கும் என்றார். அதையே நானும் திரும்பச் சொல்கிறேன். கனவு காண வேண்டும். ஆனால் அந்தக் கனவு நம்மைத் தேடி வராது. நாம் தான் அதை தேடி போக வேண்டும். நம்முடைய இலக்கை எட்ட கனவு காணுவது கண்டிப்பாக உதவும்.
மன வலிமை தந்த கருணாநிதி:
திமுக ஆட்சிக் காலத்தில் என் மீது எத்தனையோ வழக்குகளைப் போட்டார்கள். சிறையிலும் அடைத்தார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை, மாறாக கருணாநிதிக்கு நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஏனென்றால், சிறையில் இருந்தபோதுதான் எனக்கு மன வலிமை அதிகரித்தது, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்தது. மக்களின் நல் மதிப்பையும் பெற்றேன். எனவே கருணாநிதிக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை கருணாநிதி என்னை அழிக்க படாத பாடு பட்டார். என் மீதுதான் எத்தனை வழக்குகள், எனக்குத்தான் எத்தனை அவமானங்கள், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் என்னை விரட்டியடிக்க அவர் போட்ட அத்தனை திட்டங்களும் தவிடுபொடியாகின. நீதிமன்றங்களும், மக்களும் கருணாநிதியின் பித்தலாட்ட நாடகங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
கருணாநிதியை அரசியல் சாணக்கியன் என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவரைக் கைது செய்தபோது சத்தம்போட்டர், நான் அதுபோல கத்தவில்லை. என்னை சிறையில் தள்ளிய கருணாநிதி அலுமினிய தட்டைக் கொடுத்தார். தரையில் தூங்க வைக்க உத்தரவிட்டார். அவர் எனக்குக் கொடுத்த தொல்லைகளால் தான் நான் மீண்டும் வென்றேன். அவர் ஒரு சாணக்கியனாக இருந்திருந்தால் என்னைக் கைது செய்திருக்கக் கூடாது.
அதிகாரிகளை திட்டாதீர்கள்:
உங்களுக்கு ஒத்துழைக்காக அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் விமர்சனம் செய்யாதீர்கள். அவர்கள் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாரிகள் மட்டுமல்லாது தொண்டர்களும் சுறுசுறுப்பாக செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். பொதுக்குழுக் கூட்டத்திற்காக நான் அதிகாலை 3 மணி வரை விழித்திருந்து தகவல்களை தயார் படுத்திக் கொண்டிருந்தேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடிக்கிற கை தான் அணைக்கும்:
அமைச்சர்கள் நீக்கம் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. எல்லாம் நிர்வாக வசதிக்காகத்தான். அதேசமயம் அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பழமொழியை நீங்கள் மறந்து விடக் கூடாது. பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களும் மறந்து விடக் கூடாது. தவறு செய்தால் கொட்டுவதில்லையா அது மாதிரி தான். இதை தண்டனையாக நினைக்கக் கூடாது. ஒரு தாயைப் போலத் தான் நான் தவறு செய்த அமைச்சர்களை தண்டித்திருக்கிறேன். இதனால் அவர்களை ஒதுக்கிவிட்டதாக நினைக்கக் கூடாது.
மா.செக்களுக்கு எச்சரிக்கை:
அதே போல ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒரு ஒன்றியச் செயலாளரை மாவட்டச் செயலாளர் மிரட்டியுள்ளார். அவர் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
விரைவில் மகளிர் மாநாடு:
விரைவில் மகளிருக்கான மாநாட்டை அதிமுக ஏற்பாடு செய்யவுள்ளது. இதில் பெண்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். கட்சியின் மகளிர் அணியினர் தவிர, மகளிர் ஊராட்சி உறுப்பினர்கள், தலைவிகள், சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றார் ஜெயலலிதா.
-->


