சட்டமன்றத்தில் எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாய் வெளியேற்றம்: கைது செய்து போலீஸ் அடாவடி
சென்னை:
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்ட எதிர்க் கட்சியினர் இன்று வலுக்கட்டாயமாகசட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 33 எம்.எல்.ஏக்களையும் போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் அடைத்தனர். அவர்களை திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனும்சந்தித்துப் பேசினர்.
இன்று சட்டமன்றம் கூடியதும் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பாட்டாளி மக்கள கட்சித்தலைவர் ஜி.கே. மணி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.கே. பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் அந்தக் கட்சிஉறுப்பினர்கள் எழுந்து நின்று ராணி மேரிக் கல்லூரி விவகாரம், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டது, அரசு ஊழியர் போராட்டம் ஆகிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினர்.
இதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் காளிமுத்து, இது கேள்வி நேரம். இப்போது அவையில் கேள்விகள் தான்கேட்க வேண்டும். மரபுகளை உடைத்துவிட்டு உங்கள் இஷ்டத்துக்கு அவையை நடத்த முடியாது. எந்த விஷயம்குறித்தும் இப்போது விவாதிக்க முடியாது என்றார்.
குண்டுக்கட்டாய் வெளியேற்றம்...
இதையடுத்து எதிர்க் கட்சியினர் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே பெரும் கூச்சல்- குழப்பம்நிலவியது.
அப்போது எழுந்த நிதியமைச்சரும் அவை முன்னவருமான பொன்னையன், அவையின் நடவடிக்கைகளுக்குகுந்தகம் விளைவிக்கும் செயல்படும் எதிர்க் கட்சியினரை உடனே வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம்கொண்டு வந்தார். இத் தீர்மானத்தை ஏற்பதாகக் கூறிய காளிமுத்து அவர்களை வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களிடம் நெருங்கி வந்து அவர்களை இழுத்தனர்.அவைக் காவலர்களை எம்.எல்.ஏக்கள் தள்ளினர். இதனால் அவைக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜெ. வேடிக்கை...
இதை முதல்வர் ஜெயலலிதா பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கி வெளியே கொண்டு வந்தனர். அரசை எதிர்த்து கோஷமிட்டவாறு இருந்த அந்தஎம்.எல்.ஏக்கள் தூக்கி வரப்பட்டு சட்டசபைக்கு வெளியே இறக்கப்பட்டனர்.
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் அதே போல தூக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டார்.
எம்.எல்.ஏக்கள் சாலை மறியல்...
வெளியேற்றப்பட்ட காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் 33 பேரும் சட்டமன்றத்தின் வெளியேகடற்கரைச் சாலையில் நடுரோட்டில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து அந்தச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவர்களை உடனே கலைந்து செல்லுமாறு போலீசார் உத்தரவிட்டனர். இதனால் போலீசாருக்கும்எம்.எல்.ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல் நிலையத்தில் அடைப்பு:
இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் கொண்டு சென்றனர். அவர்கள்அனைவரும் கடற்கரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், பா.ம.க. கம்யூனிஸ்ட்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காவல் நிலையத்தின் முன் கூடிவிட்டனர்.
வந்தார் கருணாநிதி...
எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்தவுடன் திமுக தலைவர் கருணாநிதி கடற்கரைக்காவல் நிலையத்துக்கு வந்தார். காவல் நிலையத்துக்கு வந்த அவர் எம்.எல்.ஏக்களைச் சந்தித்துப் பேசினார்.கருணாநிதியுடன் நூற்றுக்கணக்கான திமுகவினரும் காவல் நிலையத்துக்கு வந்தனர்.
இதனால் காவல் நிலைய வாயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏக்களை ஜாமீனில் எடுக்க நடவடிக்கைஎடுப்பதாகக் கூறிவிட்டு கருணாநிதி வெளியே வந்தார்.
இளங்கோவன் சந்திப்பு:
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனும் கடற்கரைக் காவல் நிலையத்துக்கு வந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இறுதியில் விடுதலை....
தங்களது கட்சி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்து மேலும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள்கூடிவிடவே அனைத்து எம்.எல்.ஏக்களையும் போலீசார் விடுதலை செய்துவிட்டனர்.
அதே நேரத்தில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கைது செய்யப்பட்ட 19 காங்கிரஸ், 13 பா.ம.க., 6சி.பி.எம்., 5 சி.பி.ஐ. எம்.எல்.ஏக்களையும் விடுவிக்க உத்தரவிட்டுவிட்டதாக கூறினார்.
இந்தச் சம்பவங்களால் இன்று காலை கடற்கரை சாலை அல்லோலப்பட்டது.
வெளிநடப்பு, ஆர்பாட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இரு எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டதால் இரண்டாவது நாளாக திமுக எம்.எல்.ஏக்கள் இன்றும் சட்டசபைக்கு வரவில்லை.


