கோபால் மாமனார் தற்கொலைக்கு ஜெ. அரசே காரணம்: கருணாநிதி
சென்னை:
நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலின் மாமனார் ஆர்.எஸ்.பாண்டியன் தற்கொலை, அதிமுக ஆட்சியின்பழிவாங்கும் நடவடிக்கைக்கு மற்றொரு பலி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.பாண்டியன், நேற்று விருத்தாச்சலத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஏற்கனவே நக்கீரன் கோபால் சிறையில் அடைக்கப்பட்டுகொடுமைப்படுத்தப்பட்டு வரும் வேளையில், ஆர்.எஸ்.பாண்டியனின் அகால மரணம், மேலும் துன்பத்தையேதருகிறது.
விசாரணை என்ற பெயரில் கோபாலின் உறவினர்களை அலைக்கழித்து, கொடுமைப்படுத்தி வரும் போலீஸாரின் தொல்லை தாங்காமல்தான் பாண்டியன் தற்கொலை முடிவை நாடியுள்ளார். அதிமுக ஆட்சியின் அடக்முறை காரணமாகவே அவர் உயிர்ப் பலியாகியுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு மேலும் ஒரு உயிர் பறிபோய்விட்டது என்று கருணாநிதிகூறியுள்ளார்.
கோபால் அஞ்சலி:
இந் நிலையில் பாண்டியனின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த ஊரான விருதாச்சலத்தில் நடந்தது. இதில்பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து நக்கீரன் கோபால் சென்னை மத்திய சிறையில் இருந்து பலத்தபாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
பகல் 12.50க்கு விருதாசலம் கொண்டு வரப்பட்ட கோபால் மாமனாருக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி,குழந்தைகள், உறவினர்கள் கோபாலை கட்டியணைத்து கண்ணீர் விட்டனர்.
நீதிபதியின் உத்தரவுப்படி அவர் நிருபர்களிடம் ஏதும் பேசவில்லை. அறிக்கையும் வெளியிடவில்லை.


