சென்னைக்கு ரயில்கள், லாரிகளில் தண்ணீர் கொண்டு வர முடிவு
சென்னை:
சென்னையின் குடிநீர்த் தேவையை சமாளிக்க ஈரோடு மற்றும் நெய்வேலியில் இருந்து லாரிகள் மற்றும் ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழாவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.போதிய அளவு மழையும் பெய்யவில்லை. இப்போதைக்கு மழை பெய்யவும் வாய்ப்பில்லை.
மேலும் கிருஷ்ணா நதியிலும் நீர் இல்லாததால் ஆந்திர மாநிலமும் நீரைத் திறந்துவிட முடியவில்லை.
இந் நிலையில் இப்போது பெய்ய ஆரம்பித்துள்ள வட கிழக்குப் பருவ மழை சரியான அளவில் பெய்யாவிட்டால், இப்போது இந்தஏரிகளில் உள்ள நீரைக் கொண்டு அடுத்த 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்குக் குடிநீர் வழங்க முடியும்.
அப்படிப்பட்ட நிலை உருவானால், ஈரோட்டில் இருந்து ரயில் மூலமும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து லாரிகள் மூலமும்சென்னைக்கு குடிநீரைக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இக் கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிர் சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் தற்போது குறிப்பிட்டத்தக்க அளவில் தண்ணீர் இருப்பு இல்லை. மொத்தம் 93.47 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைக்க கூடிய மேட்டூர் அணையில் தற்போது 24.65 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.
மேலும் கர்நாடகத்தில் இருந்து நீரும் வரவில்லை. தென் மேற்கு பருவ மழையும் வலுவிழந்து விட்டது.
இந் நிலையில், காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிருக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.


