For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முரசொலி மாறன் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி மாறன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இதயநோய் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் மாறன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நிலை மோசமடைந்தது.

இதையடுத்து செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பல்லோவில் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால், மாறன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதால், தொடர்ந்து சென்னையில் வைத்து சிகிச்சை கொடுக்க மாறன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 6ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தார். இந் நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாறனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு அவசரச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந் நிலையில் நேற்று காலையில் மாறனின் உடல் நிலை மோசமடைந்தது. நாடித் துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. நுரையீரல், சிறுநீரகம், மூளை, இதயம், கல்லீரல் என ஒவ்வொரு உறுப்பும் செயலிழந்தன. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7.15 மணியளவில் மாறன் மரணமடைந்தார்.

மாறன் மரணமடைந்தபோது திமுக தலைவர் கருணாநிதி அருகில் இருந்தார். மாறன் உடல் நிலை மோசமடைந்து வரும் தகவல் அவருக்கு மாலை 5 மணியளவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.

மாறன் மரணமடைந்ததும், கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார். அவரை அருகில் இருந்த குடும்பத்தினர் தேற்றி வேறு அறைக்கு அழைத்து வந்து அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர். நீண்ட நேரமாக கண்ணீருடன் காணப்பட்ட கருணாநிதியை இரவு 9 மணிவாக்கில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவே மாறனின் உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது. அதன் பின்னர் கருணாநிதியின் வீட்டுக்கு மாற்றப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாறனின் மறைவுச் செய்தி கேட்டதும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகர்கள் சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த மாறனுக்கு மல்லிகா என்ற மனைவியும், சன் டிவி குழு தலைவர் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என்றமகன்களும் டாக்டர் அன்புக்கரசி என்ற மகளும் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X