சட்டமன்றத் தேர்தலில் யுக்தி மாறும்: கருணாநிதி
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை விரைவில் வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்தார்.
மேலும் சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய தகவல் தொழில்நுட்ப நகர்களை இணைக்கும் புல்லட் ரயில்களைவிடவேண்டும் என்பன உட்பட பல்வேறு யோசனைகளையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் கருணாநிதி தெரிவித்தார்.
டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கருணாநிதி பேசுகையில்,
தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் காவிரி தண்ணீரை பகிர்ந்துகொள்ளுவதற்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை விரைவில் வெளியிடச் செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவான பொருளாதார முன்னேற்றத்திற்கு போக்குவரத்து ஒரு மிக முக்கியமான உள் கட்டமைப்பாகும். ஜப்பான், ஐரோப்பாமற்றும் கொரியாவில் அதிவேக புல்லட் ரயில்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
எனவே சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் போன்ற தகவல் தொழில் நுட்ப நகரங்களை இணைத்து புல்லட் ரயில்களைஅறிமுகப்படுத்த வேண்டும்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்:
தேசிய பொது குறைந்தபட்ச திட்டத்தில் ரூ. 1,000 கோடி செலவில் சென்னை அருகே கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள்அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் அத்திட்டத்தின் அமலாக்கம் தாமதமாகி வருகிறது. எனவேஅத்திட்டத்தை விரைவு படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அத்திட்டத்தை 2012ம்ஆண்டுக்குள் அமல்படுத்தும்படி உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியது. ஆனால் இத்திட்டத்தில் தெளிவான முன்னேற்றம் எதுவும்காணப்படவில்லை. இந்தப் பிரச்சினையில் நாம் பின் தங்கியிருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே இத்திட்டத்தைவிரைவுபடுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமாகஉள்ளது.
எனவே மாநிலங்கள் தங்கள் மாநிலத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடுகளுக்கான சதவீதங்களை தீர்மானித்துக் கொள்ளமாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு மற்ற கல்வி நிறுவனங்களுக்கும் குறிப்பாக மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்படும் ஐஐடி,ஜிப்மர், என்ஐஎம்எச்ஏஎன்எஸ் மற்றும் ஏஐஐஎம்எஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
தற்போதைய தாராளமயமாக்கல் காரணமாக வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் தனியார் துறை நிறுவனங்களிலேயேஅதிகமாக இருப்பதால் அரசால் பின்பற்றப்படும் ஒதுக்கீடுக் கொள்கை தனியார் துறைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
சுயமரியாதை திருமணம்:
தமிழ்நாட்டில் திமுக அரசு 1967ம் ஆண்டிலேயே சுயமரியாதை திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக செய்வதற்காக இந்துதிருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இவ்வகை திருமணங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட சமயக் கொள்கைக்கும் அல்லதுசமுதாயத்திற்கும் எதிரானதல்ல என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை கருணாநிதி முன் வைத்தார்.
பின்னர், இக் கூட்டத்தில் பாரத் நிர்மாண் என்ற பிரமாண்டமான தேச மறு சீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது எனமுடிவெடுக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியை மனதில் கொண்டு இந்த பல்லாயிரம் கோடி செலவிலான திட்டம்உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கிராமப் பகுதிகளில் கல்வி, மின் வசதி, சாலை வசதி, வீட்டு வசதி, கழிப்பறை வசதிகளை உருவாக்கித் தரவும், நகர்ப்பகுதிகளில் துறைமுகங்கள், விமான நிலையங்களை விரிவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா மேற்கொண்டதிட்டங்களிலேயே அதிக செலவு பிடிக்கும் மிக பிரமாண்டமான திட்டமாக இது இருக்கும் என்று தெரிகிறது.
கருணாநிதிக்கு முக்கியத்துவம்:
இந்தக் கூட்டத்தில் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். பிரதமர்,சோனியாவுக்கு அருகில் அவருக்கு இருக்கை போடப்பட்டிருந்தது. கூட்டம் நடந்தபோது அடிக்கடி கருணாநிதியுடன் சோனியாபேசிக் கொண்டிருந்தார்.
இன்று கருணாநிதியை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து சோனியா காந்தி சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
இடைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்துத் தான் அதிமுக வென்றுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத்தேர்தலில் எங்களது யுக்தி மாறும். புதிய யுக்தியைக் கடைபிடித்து அதிமுகவை வீழ்த்துவோம் என்றார்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் விபி சிங்கின் இல்லத்துக்குச் சென்ற கருணாநிதி அங்கு அவரைச் சந்தித்துப் பேசினார். இன்றுமாலை கருணாநிதி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |