மேம்பால ஊழல் வழக்கு: 5 என்ஜீனியர்கள் மீது குற்றப்பத்திரிக்கை
சென்னை:
சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மீதான வழக்கில், 5 உதவிசெயற் பொறியாளர்கள் மீது சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.115.50 கோடி அளவுக்கு முறைகேடுநடந்திருப்பதாக அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலு, புகார் கொடுத்தார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி,பொன்முடி உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதன் அடிப்படையில் 2001ம் ஆண்டு ஜூன் 29ம் தேதிநள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார்.
மேம்பாலங்கள் தரமற்ற வகையில் கட்டப்பட்டிருப்பதால், மாநாகராட்சிக்கு ரூ. 12 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும்,இதற்கு கருணாநிதியும், ஸ்டாலினுமே முக்கியக் காரணம் என்றும் ஆச்சார்யலு தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் ஸ்டாலின் முதல் குற்றவாளியாகவும், கருணாநிதி இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.இவர்கள் தவிர முன்னாள் தலைமைச் செயலாளர்கள் முத்துச்சாமி, கே.ஏ.நம்பியார், முன்னாள் மாநகராட்சி ஆணையர் கோலப்பன்,நகராட்சி நிர்வாக முன்னாள் செயலாளர் மாலதி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதுதவிர 16 பொறியாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில், 5 உதவி செயற்பொறியாளர்கள் மீது சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று திடீரென குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
நகர திட்டத்துறை உதவி செயற்பொறியாளர் அன்புச் செல்வன், கட்டிடத் துறை உதவி செயற்பொறியாளர் கணேசன், அருள் விஜி,9வது மண்டல உதவி செயற் பொறியாளர் ராஜசேகர், பாலங்கள் துறைக்கான உதவி செயற்பொறியாளர் மாதவன் ஆகியோர் மீதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மேலும் 11 பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக பொறியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சியின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.இக்குழுவில் துணை மேயர் கராத்தே தியாகராஜன், ஆணையர் விஜயக்குமார், காங்கிரஸ் கவுன்சிலர் சைதை ரவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதியில் வெளி நடப்புச் செய்தார் சைதை ரவி.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீதான நடவடிக்கை என்ன, குற்றப்பத்திரிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்துதெரிவிக்க விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. பத்மநாபன் மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications