For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்டதேவி தேரோட்டம்: தலித்துகளையும் அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துத்தரப்பினரும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். தலித் மக்களும் வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்பட வேண்டும். இதை மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி கிராமம். இக்கிராமத்தில் உள்ள அருள்மிகு சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்அப்பகுதியில் பிரசித்தமானது. இங்கு ஆண்டாண்டு காலமாக தேர்த் திருவிழா நடந்து வருகிறது. இதில் தாழ்த்தப்பட்டசமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேரைப் பிடித்து இழுக்க அனுமதி வழங்கப்படுவதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக இந்த அவல நிலைக்கு எதிராக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போராடி வருகிறார்.கடந்த 1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தமிழக அரசு 144 தடைச் சட்டத்தைப் போட்டு, சட்டம்,ஒழுங்கைக் காரணம் காட்டி தேரோட்டத்தைத் தடுத்து வருவதாக அவர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்த் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அப்போதுஉயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த உத்தரவு நிறைவேறாமல் உள்ளது.

இந் நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இம்முறையும் தேர்த் திருவிழாவில்தலித் மக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கிருஷ்ணசாமி சார்பில் வழக்கறிஞர் சந்துரு சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்தார். அதில், 21ம் தேதி நடைபெறவுள்ள தேரோட்டம் மிகவும் சுமுகமாகவும், தலித் மக்களும் கலந்து கொள்ளும்வகையிலான நிகழ்வாக அமைய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

மேலும், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி தேரோட்டத்தைத் தள்ளிப் போட அரசு முயலக் கூடாது என்றும், தேரோட்டத்தைசுமுகமாக நடத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்கலாம் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவோடு சேர்த்து தனது மனுவையும் விசாரிக்குமாறு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜனும் ஒருமனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதலாவதுடிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கண்டதேவி கிராம மக்கள் சார்பில் கேசவன் என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் கண்டதேவி கிராமநாட்டார் இன மக்களும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றனர். அவர்களுக்குள் எந்தப் பூசலும்இல்லை. அரசியல் கட்சிகள் தான் தேரோட்ட நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்துகின்றன என்று தனது மனுவில் கேசவன் கூறியிருந்தார்.

விவாதத்தின் போது, அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் வாதிடுகையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியகடமை அரசுக்கு உள்ளது. பிரச்சினை ஏற்படும்போது அதற்கேற்ற வகையில் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியது கட்டாயம்ஆகிறது.

வரவிருக்கும் தேரோட்ட நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பை அரசு அளிக்கும். இதுதொடர்பாக புதிய மனு தாக்கல் செய்ய அவகாசம்தர வேண்டும் என்றார்.

இதற்கு கிருஷ்ணசாமியின் வழக்கறிஞர் சந்துரு, வரதராஜனின் வழக்கறிஞர் வைகை ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 144 தடையுத்தரவை பிறப்பிக்க அரசு முயலுகிறது. இதற்கு நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாதுஎன்று அவர்கள் ஆட்சேபித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி கட்ஜு தனது உத்தரவை வழங்கினார். அவர் கூறுகையில், கடவுள்அனைவருக்கும் பொதுவானவர். கடவுளை வழிபடுவதில் ஜாதி, இனம், மதம், மொழி பேதம் இருக்கவே கூடாது. ஜனநாயகநாட்டில் அனைவரும் சமம் தான்.

கடவுளை கும்பிடுவதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. கடவுளை வழிபட நினைப்போருக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். ஆண்டவனை வழிபடுவதில் பாகுபாடு பார்க்கக் கூடாது. தேரோட்ட நிகழ்ச்சியில் இந்துக்கள் அனைவரும்அணிவகுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேரோட்ட நிகழ்ச்சியில் தலித் மக்களும் பங்கேற்க மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அவர்களும் தேரை வடம் பிடித்த இழுக்கலாம். இதில் தவறு நடந்தால் உயர்நீதிமன்றம் அதைப் பார்த்துக் கொண்டிருக்காது.

1998ம் ஆண்டு இதே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, 1999ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்தஉத்தரவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அப்படியே பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டியதுஆட்சித் தலைவரின் கடமையாகும்.

திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சம உரிமை, சம மரியாதை வழங்கப்படுகிறதா என்பதை ஆட்சித் தலைவர்கண்காணிக்க வேண்டும். திருவிழாவுக்குப் பின்னர் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் ஆட்சித் தலைவர் தாக்கல்செய்ய வேண்டும்.

போலீஸார் 144 தடையுத்தரவு போட்டு தேரோட்டத்தைத் தடுக்க முயலுவதாக வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால்இந்த முறை அந்தத் தவறு நடக்க விட மாட்டோம். இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகள், 144 தடையுத்தரவை விட 10 மடங்கு சக்திவாய்ந்தவை என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்:

இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதாக கூறி, சிவகங்கையில் இன்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்தை மதுரை எம்.பி. மோகன் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் மோகன் பேசுகையில், தலித் மக்களும் தேரை வடம் பிடித்து இழுக்க உயர்நீதிமன்றம் 1999ம் ஆண்டிலேயேஉத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த உத்தரவு சரிவர கடைப்பிடிக்ப்படவில்லை.

எனவே இந்த முறையாவது அரசு தலித் மக்களின் உரிமையை பாதுகாக்கவும், நிலை நாட்டவும் ஒத்துழைக்க வேண்டும். இதை,வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X