கபினி நீர் மேட்டூர் வந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர்:
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.
கேரளாவின் வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால் கர்நாடகத்தின் கபினி அணைக்கு நல்ல நீர் வரத்து உள்ளது.இதனால் பாதுகாப்பு கருதி, கடந்த வாரம் முதல் கபினியிலிருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
முதலில் விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து தற்போது விநாடிக்கு20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரிப் படுகை நீண்ட மாதங்களாக தண்ணீரையே காணாததால் வறண்டு போய்க் கிடந்தது. இதனால் கபினியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று காலை தான் மேட்டூர் அணையை அடைந்தது.
கபினி நீர் வருகையைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலைநிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3264 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கும் என்றுதெரிகிறது.
மேட்டூர் அணையில் தற்போது 51.69 அடி நீர், அதாவது 18.89 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. கபினியிலிருந்து தொடர்ந்துதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், கபினிக்கு தொடர்ந்து நல்ல நீர்வரத்து இருப்பதாலும் மேட்டூர் அணைக்கு மேலும்அதிக நீர் வரக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர் வரத் தொடங்கியிருப்பதால் ஜூலை இறுதி வாக்கில் அல்லது ஆகஸ்ட் முதல்வாரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சிஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
