சென்னை மாநகராட்சியில் மர்ம தீ: கராத்தே அறையில் முக்கிய ஆவணங்கள் அழிப்பு?
சென்னை:
சென்னை மாநகராட்சியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் துணை மேயர் கராத்தே தியாகராஜனின் அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து போயின.
அதிமுக தலைமையுடனான மோதலால் கராத்தே தலைமறைவாக உள்ள நிலையில் இந்த திடீர் தீ விபத்து பல்வேறுசந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
இன்று காலை 10.50 மணியளவில் இரண்டாவது மாடியில் உள்ள துணை மேயர் அறையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீவேகமாகப் பரவி துணை மேயரின் உதவியாளர்கள் அறை, தலைமைப் பொறியாளர் பாலசுப்பிரமணியத்தின் அறைக்கும்பரவியது.
இதையடுத்து 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. அதற்குள் கராத்தேவின் அறையில் இருந்த பலஆவணங்கள் எரிந்து போய்விட்டன.
இது விபத்தா அல்லது வேறு யாருடைய கைவரிசையா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள கராத்தே மீது வழக்குகள் பதிவாக உள்ள நிலையில், இந்த தீவிபத்து பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஆவணங்களை அழிக்க இந்தத் தீ வைக்கப்பட்டதோ என்றசந்தேகமும் பரவியுள்ளது.
மேலும் கராத்தேவை வசமாக மாட்டி விட யாராவது இந்த வேலையைச் செய்திருப்பார்களோ என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மொத்தத்தில் இந்தத் தீ விபத்து பல கேள்விகளையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது வெளியே மழை கொட்டோ, கொட்டு என்று கொட்டிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாநகராட்சி எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் கூறுகையில், துணை மேயர் தலைமறைவானது, அதைத் தொடர்ந்து அவரதுஅறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதெல்லாம் ஏதோ திகில் கதை மாதிரி இருக்கிறது. என்னவோ நடக்கிறது என்றனர்.
கராத்தே பேட்டி:
இந் நிலையில் கராத்தேவை தினகரன் நிருபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த தீ விபத்து குறித்து கேட்டபோது:
நான் இப்போது புனேவில் உள்ளேன். எனது அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக எனக்கும் தகவல் வந்தது. அது தொடர்பாக முழுவிவரம் இல்லை. இதில் என்னென்ன ஆவணங்கள் எரிந்து போயின என்பது குறித்து இப்போது எனக்குத் தெரியவில்லைஎன்றார்.












Click it and Unblock the Notifications