மெயில்: பேராசிரியர் விடுதலை- 4 பேர் கைது
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்திற்கு மிரட்டல் இ-மெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்த 11 பேரில் கல்லூரிப் பேராசிரியர் உள்பட 3 பேரை போலீஸார்விடுவித்துள்ளனர். ஆனால் இன்டர்நெட் மையத்தில் வேலை பார்த்து வந்த ஆரோக்கிய ராஜ் என்ற இளைஞர் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்துக்கும் அமெரிக்கத் தூதரகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக நெல்லைபாளையங்கோட்டையில் உள்ள நெல்லை ஆன்லைன் இன்டர்நெட் மையம், முருகன்குறிச்சியில் உள்ள பிராட்பேண்ட் இன்டர்நெட் மையம் ஆகியவற்றை போலீஸார்சீல் வைத்துள்ளனர்.இந்த இன்டர்நெட் மையங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள், ஊழியர்கள், பாளையங்கோட்டை சதக்கதுல்லா அப்பா கல்லூரி பேராசிரியர், மாணவர்கள் உள்ளிட்ட 11பேரை போலீஸார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
இவர்களிடம் டெல்லியிலிருந்து வந்த இன்டெலிஜென்ஸ் பீரோவின் தனிப் படையினரும் விசாரணை நடத்தினர். இந் நிலையில் கல்லூரிப் பேராசிரியரான ஷேக் ஜிந்தாஉள்ளிட்ட 3 பேரை தற்போது விடுவித்துள்ளனர். அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று தெரிய வந்ததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாளையங்கோட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வரும் ஷேக் ஜிந்தா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றி வருகிறார்.
அவர் இ-மெயில் மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரம் எதுவும இல்லை என்பதால் ஐபி அவரை விடுவித்துள்ளது.
இதுகுறித்து ஜிந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் தவறு செய்யவில்லை, அதனால் தப்பித்தேன். கடவுளுக்குப் பயந்தவன் நான். எனவே எந்தத் தவறும்செய்யத் துணியாதவன்.
சனிக்கிழமை காலை சுமார் 5 மணியளவில் போலீஸார் என்னை வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றனர். எதற்காக கூட்டிச் செல்கின்றனர் என்று முதலில் தெரியவில்லை.
ஆயுதப்படை மைதானத்தில் உள்ள விருந்தினர் இல்லத்திற்குக் கூட்டிச் சென்று என்னிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். மிரட்டல் இ-மெயில்அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நேரத்தில் நான் கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். எனவே எனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்று அதிகாரிகளிடம்கூறினேன்.
என்னுடன், எனது கல்லூரியில் பணியாற்றும் பக்ருதீன், தபரே ஆலம் ஆகியோரையும் டெல்லி போலீஸார் விசாரித்தனர். நாங்கள் 3 பேரும் எந்தத் தவறும்செய்யவில்லை என்று தெரிய வந்ததும் தற்போது மூன்று பேரையும் விடுவித்து விட்டனர் என்றார் ஜிந்தா.
3 பேரை விடுவித்துள்ள போலீஸார் மற்ற 9 பேரையும் தொடர்ந்து தங்களது கஸ்டடியில் வைத்துள்ளனர்.
இதற்கிடையே நெல்லை ஆன்லைன் இன்டர்நெட் மைய ஊழியர் ஆரோக்கியராஜை காணவில்லை என்று அவரது தாயார் அன்ன மேரி பரபரப்பு தகவலைவெளியிட்டுள்ளார்.
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியராஜ். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடுதிரும்பவில்லை. அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளாரா என்றும் அன்னமேரிக்குத் தெரியவில்லை.
விசாரணை நடந்து வரும் ஆயுதப்படை மைதானம் அருகே கண்ணீரும், கவலையுமாக அவர் நின்று கொண்டு வருகிற, போகிற போலீஸாரிடம் தனது மகன் குறித்துவிசாரித்துக் கொண்டுள்ளார்.
போலீஸ் திணறல்:
இதற்கிடையே இந்த விசாரணையில் இதுவரை எந்தத் துப்பும் துலங்காததால், போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
டெல்லியிலிருந்து சர்மா தலைமையில் வந்துள்ள தனிப்படையினர் ஏற்கனவே விசாரித்து வரும் நிலையில் இன்று கம்ப்யூட்டர் குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சஞ்சய்என்ற அதிகாரியின் தலைமையில் இன்னொரு குழு இன்று டெல்லியிலிருந்து நெல்லை விரைந்தது.
இந்தக் குழுவுடன், சென்னை மாநகர கம்ப்யூட்டர் குற்றத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையிலான குழுவும் நெல்லை வந்துள்ளது.
இரு குழுவினரும், சீல் வைக்கப்பட்டுள்ள இன்டர்நெட் மையங்களைத் திறந்து சோதனையிட்டனர். மேலும் போலீஸ் பிடியில் உள்ள 8 பேரிடமும் விசாரணைநடத்தவுள்ளனர்.
இரு இன்டர்நெட் மையங்களுக்கும் பிரவுசிங் செய்ய வருவோர் குறித்த வருகைப் பட்டியலை இரு மையங்களுமே சரிவர பராமரிக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் குற்றவாளி யார் என்பது குறித்து துப்பு துலங்காமல் போலீஸார் தடுமாறி வருகின்றனர்.
மேலும் 4 பேர் பிடிபட்டனர்:
இதற்கிடையே இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மேலும் 4 பேரை சென்னையிலிருந்து வந்துள்ள போலீஸ் படை பிடித்து விசாரித்து வருகிறது.
சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் நெல்லையில் முகாமிட்டுள்ள போலீஸ் படை, புதிதாக இந்த 4 பேரைப் பிடித்து விசாரணைமேற்கொண்டுள்ளது.
இவர்களில் 2 பேர் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியின் தொண்டர்கள் எனத் தெரிகிறது. தங்களது கட்சியின் முக்கியத் தலைவர் கூறியதன் பேரிலேயே மிரட்டல்விடுத்து மெயில் அனுப்பியதாக அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
அந்த இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இருவருக்கும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர் உதவியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த பொறியாளர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்கவும் போலீஸார் வலை வீசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications