• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரீட்சையா எழுதுகிறார் ஜெ? துரைமுருகன் கேள்வி

By Staff
|

சென்னை:

பாலாற்று அணை விவகாரம் தொடர்பாக பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதைக் கண்டித்து சட்டசபையிலிருந்து திமுக, பாமகஉள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், திமுக துணைத் தலைவர் துரைமுருகன், பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ்உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் எழுந்து ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான பிரச்சினையைஎழுப்பினர்.

ஆந்திர அரசு அணை கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கி விட்டது. எனவே இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசுஎன்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கம் அளித்தார். அதில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்ட நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அறிந்தவுடன் அதுதொடர்பாக அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம்எழுதினேன். இந்தக் கடிதத்திற்கு இதுவரை பதிலே வரவில்லை.

கடிதத்திற்குப் பதிலே அனுப்பாதவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு முயன்றால் அவர்களை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட்கொடுப்பார்களா? எனவே ஆந்திர அரசு உரிய பதிலை அனுப்பாவிட்டால், உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திர அரசு, சித்தூர் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே கட்டத் திட்டமிட்டுள்ள இடம் ரிசர்வ் பாரஸ்ட் எனப்படும் காப்புக்காட்டுப் பகுதியாகும். காப்புக் காடுகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகம்தான் அனுமதி தர வேண்டும். இப்போது இந்த அமைச்சக பொறுப்பில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்தான்உள்ளார்.

அவர் இந்த அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த என்ன செய்யப் போகிறார்? இதை திமுகவும், சம்பந்தப்பட்டஅமைச்சரும்தான் விளக்க வேண்டும்.மத்தியிலும், ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிதான் நடந்து வருகிறது.

எனவே ஆந்திர அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த தமிழக காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைகாங்கிரஸார் விளக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

இதையடுத்து எழுந்த துரைமுருகன் முதல்வரின் அறிக்கையில் அணைக் கட்டுத் திட்டத்தைத் தடுக்க என்ன நடவடிக்கைஎடுக்கப்படவுள்ளது என்பதற்கு தெளிவான விளக்கம் ஏதும் இல்லை என்றார். மேலும் அவர் தொடர்ந்து பேச முற்பட்டார். அதற்குஅனுமதி மறுத்த சபாநாயகர் காளிமுத்து, முதல்வர் பேசுகையில் குறுக்கிட வேண்டாம் என்றார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள்எழுந்து கோஷமிட்டனர்.

பின்னர் தங்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்காத சபாநாயகரின் போக்கைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்துதுரைமுருகன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களும் வெளியேறினர்.

இதே காரணத்திற்காக பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச்செய்தனர்.

பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசுகையில், பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசின்முயற்சியைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டால், கோர்ட்டுக்குப் போவோம், பிரதமரை சந்திப்போம்என்று சுற்றி வளைத்துப் பதில் கூறுகிறார் ஜெயலலிதா.

அவரது விளக்க அறிக்கையில் நேரடியாக எந்த பதிலும் இல்லை. பாலாறு குறித்து கட்டுரை எழுதுக என்று பரீட்சையில் கேள்விகேட்டால் ஒரு பக்கத்திற்குப் பதில் எழுதுவார்களே மாணவர்கள், அது மாதிரி நீண்டதொரு அறிக்கையை அவர் வாசிக்கிறார்.

இந்த அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார் துரைமுருகன்.

பணிகளை தொடங்கியது ஆந்திரா:

இந் நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான பூர்வாங்கப்பணிகளை அம்மாநில நீர்ப்பாசனத்துறை தொடங்கியுள்ளது.

கர்நாடகத்தில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. ஆந்திராவுக்குள் 48 கிலோமீட்டர்தொலைவுக்கு பாலாறு ஓடுகிறது. இதில் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே சிறியஅணையைக் கட்ட அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது வட தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக வேலூர் மாவட்ட மக்கள் பெரும் பீதியில்ஆழ்ந்துள்ளனர். வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு பாலாறுதான் முக்கிய நீர் ஆதாராமாக உள்ளது.

ஆந்திர அரசின் முடிவுக்கு தமிழக கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந் நிலையில் அணைகட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது.

சித்தூர் மாவட்ட நீர்ப்பாசனத் துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அணை கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளஇடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் அணை கட்டுவதற்கான திட்டம் இறுதி வடிவம்கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த அணையால் ஆந்திராவில் 10 கிராமங்கள் மட்டுமே பலனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X