For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதியால் ஏற்பட்ட ரூ. 1 கோடி நஷ்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொங்கல் தினத்தன்று வெளியாவதாக அறிவித்து விட்டு ஒரு நாள் தாமதமாக ஆதி படத்தை வெளியிட்டதால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட ரூ. 1 கோடி நஷ்டத்தை நடிகர் விஜய் ஈடு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் அவரது படங்களை இனிமேல் திரையிட மாட்டோம் என்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Trisha

விஜய் நடித்த ஆதி, பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேதியை மாற்றி 15ம் தேதிதான் படம் வெளியாகும் என அறிவிக்ப்பட்டது.

இதனால் ஆதி படத்தை திரையிடவிருந்த திரையரங்குகளில் 14ம் தேதி ஆதி வெளியாகவில்லை, எனவே வேறு வழியின்றி அன்று ஒரு நாள் மட்டும் வேறு படத்தை போட வேண்டிய கட்டாயத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர்.

உண்மையில் ஆதி படத்தை பிப்ரவரியில்தான் திரையிடுவதாக இருந்தார் விஜய்யின் தந்தையும் படத் தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரா. ஆனால் அஜீத் நடித்த பரமசிவன் பொங்கலுக்கு வெளியாவதால் தனது படம் அன்றைய தினமே வெளியாக வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியதன் காரணமாக வேகம் வேகமாக படத்தை முடித்து பொங்கலுக்கு திரையிட்டனர்.

Vijay

இந் நிலையில், ஆதி ஒரு நாள் தள்ளிப் போனதால், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், இதை விஜய் தான் ஈடு கட்ட வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்க அதிபர்கள் சங்கத் தலைவர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

விஜய் நடித்த ஆதி படம் பொங்கல் பண்டிகையன்று வெளிவர இருந்ததால் அதிக விலை கொடுத்து படத்தை வாங்கியிருந்தோம். பொங்கல் பண்டிகை , தமிழர் திருநாள் என்பதாலும், தொடர்ந்து விடுமுறை தினம் என்பதாலும், புதிய திரைப்படம் என்பதால் டிக்கெட் விலையை 2 வாரங்களுக்கு அதிகரித்துக் கொள்ளலாம் என்பதாலும் ஆதி படத்தை வெளியிட தயார் நிலையில் இருந்தோம்.

ஆனால் 15ம் தேதிதான் படம் வெளியானதால், பொது மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், படம் வருமோ, வராதோ என்ற சந்தேகம் அவர்களிடையே நிலவியதால் முதல் சில நாட்களுக்கு கூட்டமே தியேட்டருக்கு வரவில்லை. இதனால் 14 தியேட்டர்களுக்கு சுமார் ரூ. 1 கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

Trisha and Vijay

இந்த நஷ்டத்தை நடிகர் விஜய் தான் ஈடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுமாதிரி கோருவது வழக்கமானதுதான். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மணிரத்தினம் போன்றோரிடமும் இதுபோன்ற கோரிக்கை விடுக்கப்பட்டு அவர்களும் நஷ்டத்தை ஈடு செய்து கொடுத்துள்ளனர்.

அதேபோல விஜய்யும் ஆதி படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்து தர வேண்டும். அவர் தருவார் என்று நம்புகிறோம். ஒரு பத்திரிக்கையில், ஆதி திரைப்படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தில் 40 சதவீதத்தை விஜய் திருப்பித் தந்து விட்டார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்தத் தொகை எங்களுக்கு வந்து சேரவில்லை. நஷ்டத்தை ஈடு செய்து தர வேண்டியது விஜய்யின் கடமை. அவர் செய்ய மறுத்தால், எங்களது பொதுக் குழுவைக் கூட்டி வருங்காலத்தில் விஜய் படங்கள் எதையும் திரையிட மாட்டோம் என்ற முடிவெடுக்க வேண்டி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் கண்ணப்பன்.

Trisha and Vijay

இதையடுத்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரா வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில்,

ஆதி படத்தின் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியா வினியோக உரிமையை பங்கஜ் மேத்தாவின் பவர் மீடியா நிறுவனத்திற்கு விற்றுள்ளோம். படத்தை திரையிடுவது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் அவர்கள்தான் எடுத்தார்கள்.

எனவே காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆதி வெளியானது தொடர்பாக எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

மேலும், வினியோகஸ்தர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கத்தான் பிப்ரவரியில் வெளியாக வேண்டிய படத்தை ஜனவரியில் வெளியிட்டோம். அதையும் 15ம் தேதியே வெளியிட வினியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே அன்றைய தினம் படம் ரிலீஸானது.

இந் நிலையில் எங்களால் தாமதம் ஏற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் சந்திரசேகரா. (நியூமராஜிப்படி எஸ்.ஏ.சந்திரசேகரன் இப்போது சந்திரசேகரா ஆகிவிட்டது தான் உங்களுக்குத் தெரியுமே)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X