For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய்காந்த் மனைவி-சசிகலா பேச்சுவார்த்தை?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை அதிமுக கூட்டணிக்குள் இழுக்க சசிகலாவே நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கும் விஜய்காந்தை இழுக்க, அவரது மனைவி பிரேமலதாவுடன் சசிகலாவே நேரடியாக பேரம் பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. கூட்டணியில் 30 இடங்கள் வரை விஜய்காந்த் கட்சிக்குத் தர முதல்வர் ஜெயலலிதா தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக விஜய்காந்தை இழுக்க தமிழக நாளிதழ் உரிமையாளர் ஒருவரின் உதவியை அதிமுக நாடியது. அவரும் போய் விஜய்காந்துடன் பேசினார். ஆனார், 70 தொகுதிகள் தந்தால் கூட்டணிக்குத் தயார் என்று கேப்டன் வசனம் பேச, நாளிதழ் அதிபர் திரும்பி வந்துவிட்டார்.

இதையடுத்து சசிகலாவே களத்தில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அதிமுக-மதிமுக-விஜய்காந்த்-திருமாவளவன் என கூட்டணி அமைத்துவிட்டால் திமுக கூட்டணியை எளிதாக எதிர்கொள்ளலாம் என ஜெயலலிதா கருதுகிறார்.

தேனியில் மச்சான் போட்டி?:

இந் நிலையில் தேனி சட்டசபை தொகுதியில் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

விஜயகாந்த் போட்டியிடுவதற்காக நான்கு தொகுதிகளை அக்கட்சி முடிவு செய்து வைத்துள்ளது. அதில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் கேப்டன் போட்டியிடக் கூடுமாம்.

விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, மதுரை மத்தி ஆகியவை அந்தத் தொகுதிகள்.

அதேபோல விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ், தேனி தொகுதியில் நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. இத்தொகுதியில் தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்தினர் ஜாஸ்தி என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டனின் மனைவி பிரேமலதா வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் குடியாத்தம் தொகுதியிலும் தேமுதிக போட்டியிடுகிறது. அனேகமாக அவரது மனைவியைக் கூட அத்தொகுதியில் நிறுத்துவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

இந்தத் தொகுதியிலும் தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

பண்ருட்டி தொகுதியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிடுவார். பொதுச் செயலாளர் ராமு வசந்தன் மதுரை அல்லது தேனி மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கூட தங்களுக்குத் தேவையான முக்கியமான இந்தத் தொகுதிகளை விஜயகாந்த் கேட்டு வாங்குவார் என்கிறார்கள்.

வேட்பாளர் தேர்வு மும்முரம்:

இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி விஜய்காந்த கட்சியில் மொத்தம் 3,965 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 3,195 பேர் பொதுத் தொகுதகிளில் போட்டியிடவும், 532 பேர் தனித் தொகுதிகளுக்கு போட்டியிட விரும்பியும் விண்ணப்பம் தாக்கல் செய்தனர். புதுவையில் போட்டியிட விரும்பி 238 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

இவர்களிலிருந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நேர்காணல் சென்னையில் தொடங்கியுள்ளது. தே.மு.தி.க. தலைமையகமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் நேர்காணல் நடக்கிறது.

முதல்கட்டமாக சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் விண்ணப்பம் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இதில் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமு வசந்தன், பொருளாளர் சுந்தரராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார வசதி, தொகுதியில் உள்ள செல்வாக்கு, கடைசியாக கல்வித் தகுதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர்களிடம் விஜயகாந்த் கேட்டு வருகிறார்.

நாளை மதுரையில் நடைபெறும் நேர்காணலில், திருச்சி, தேனி, கரூர் மாவட்டத்தினருடன், 8ம் தேதி தூத்துக்குடியில், விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டத்தினருடனும் நேர்காணல் நடத்துகிறார் விஜய்காந்த்.

அதைத் தொடர்ந்து 12ம் தேதி நெல்லையில், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டத்தினருடனும், 15ம் தேதி மதுரையில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தினருடனும் நேர்காணல் நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X