இலங்கை-ஸ்டாலின், அமைச்சர்கள் கண்டன பேரணி
சென்னை:இலங்கை கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்து சென்னையில் இன்று தமிழக அமைச்சர்கள், திமுகவினர் கலந்து கொண்ட பிரமாண்டகண்டனப் பேரணி நடந்தது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையின் போக்கைக் கண்டித்து சென்னையில் இன்று அமைச்சர்கள், திமுகவினர்கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.
காலை 11 மணிக்கு சென்னை மன்ரோ சிலையிலிருந்து கண்டனப் பேரணி தொடங்கியது. மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமைதாங்கினார். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி முன்னிலை வகித்தார்.
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என். நேரு, பெரியகருப்பன், பூங்கோதை ஆலடி அருணா, மைதீன் கான் ஆகியோரும், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்களும், ஆயிரக்கணக்கான திமுகவினரும் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசு, கடற்படையைக் கண்டித்து கோஷமிட்டபடி சென்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைமுன்பு பேரணி முடிவடைகிறது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டமும், கூட்டமும் நடைபெறுகிறது.
அதன் பின்னர் இலங்கை துணைத் தூதரகத்திற்குச் சென்று இலங்கை அரசையும், கடற்படையையும் கண்டித்து மனு கொடுக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்: இதற்கிடையில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இறுதித் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் பாதுகாப்பு அளிக்கவற்புறுத்தியும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடித் தொழிலை நடத்துவதை உறுதி செய்யக் கோரியும், இந்தப் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வு காணவலியுறுத்தியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் வரை தாங்கள் மீன் பிடிக்கப் போவதில்லைஎன்று ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
நாளை காலை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர்கள் குதிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications