இங். திகில் ஆட்டம், இலங்கை திரில் வெற்றி
செயின்ட் பீட்டர்ஸ்:இங்கிலாந்து அணியுடன் நடந்த சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை அணி மயிரிழையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று செயின்ட் பீட்டர்ஸ் நகரில் இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான பரபரப்பான ஆட்டம் நடந்தது. படு விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டி ரசிகர்ளுக்கு பெரும் திரில்லான ஆட்டமாக அமைந்தது.
முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து இலங்கையை பேட் செய்ய பணித்தது. ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய இலங்கை வீரர்கள் பிற்பகுதியில் சொதப்பலாக ஆடினர். இதனால் பின் பாதியில் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தது. இதனால் 235 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது.
தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா 62, கேப்டன் ஜெயவர்த்தனே 56 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் மகமூத் 4 விக்கெட்டுகளையும், பிளின்டாப் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
![]() |
பின்னர் விளையாட தொடங்கிய இங்கிலாந்து அணி 236 என்ற வெற்றி இலக்குடன் ஆட தொடங்கியது.
தொடக்க வீரர்களான கேப்டன் மைக்கேல் வாகனும், எட்ஜாய்ஸும் ரன் எதுவும் எடுக்காமல் முதலிலேயே அவுட் ஆனதால் இங்கிலாந்து தடுமாறத் தொடங்கியது. பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால், இங்கிலாந்து பரிதாபமாக காணப்பட்டது.
133 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 பேர் அவுட் ஆகி விட்டனர். இந்த நிலையில், பால் நிக்சன், ரவி போபாரா ஜோடி அபாரமாக விளையாடி ஸ்கோரை 220க்கு உயர்த்தியது.
இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 87 ரன்களைச் சேர்த்தனர். ரவி போபாரா மிகவும் சிறப்பாக ஆடி 53 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். நிக்சன் 42 ரன்கள் சேர்த்தார்.
சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடியில் முதலில் பால் நிக்சன் ஆட்டமிழந்தார். இருந்தாலும் ரவி போபாரா அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று விடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதனால் கடைசி ஓவரில் ஆட்டம் படு விறுவிறுப்பானது. கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் போபாரா, தில்ஹாராவின் பந்தை எதிர்கொண்டார். தூக்கி அடிக்க முயன்றபோது பந்து ஸ்டம்புகளை எகிறச் செய்து இங்கிலாந்தின் வெற்றிக் கனவைத் தகர்த்து விட்டது.
233 ரன்களை மட்டுமே எடுத்து 2 ரன்களில் பரிதாபமாக தோல்வியுற்றது இங்கிலாந்து.
போபாரவின் சிறப்பான ஆட்டம் அவருக்கு ஆட்ட நாயகன் பரிசைப் பெற்றுக் கொடுத்தது.



Click it and Unblock the Notifications
