கல்லூரியின் புகார்: 2 மாணவிகள் தற்கொலை
வேலூர்:வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த இரு மாணவிகள், தங்களது நடத்தை குறித்து கல்வி நிறுவனம் அவதூறு புகார் கூறியதால் மனம் உடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் இளத்தகிரி கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகள் ஷோபா மேரி(20). அதேபோல பெரம்பலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தைச் சேர்ந்த பிராங்க் ராயல் என்பவரின் மகள் ஷீபா (21).
இவரும் திருப்பத்தூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தனர். சமீபத்தில் இருவரையும் கல்லூரி விடுதியிலிருந்து நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும், இருவரின் பெற்றோரையும் அழைத்து உங்களது மகள்களின் நடத்தை சரியில்லை, இருவருக்கும் இடையே தவறான உறவு உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இதனால் இருவரும் மனம் உடைந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும் அங்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இருவரும் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றில், நாங்கள் அப்பாவிகள். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. வீண் விஷயங்களைச் சொல்லி எங்களை வெளியேற்றி விட்டனர்.
இந்தத் தவறை எங்களால் மன்னிக்க முடியாது. யார் மன்னித்தாலும் நிச்சயம் கடவுள் மன்னிக்க மாட்டார் என்று எழுதியுள்ளனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications