உல்மர் இயற்கையாகத்தான் இறந்தார்: ஜமைக்கா போலீஸ்
லண்டன்:முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் இயற்கையாகத்தான் இறந்துள்ளார். அவரை யாரும் கொலை செய்யவில்லை என்று ஒரு வழியாக இறுதியாக அறிவித்துள்ளது ஜமைக்கா போலீஸ்.
சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது ஜமைக்காவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் மார்ச் 18ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
![]() |
அவரை யாரோ சிலர் கழுத்தை நெரித்துக் கொன்றதாக முன்னர் கூறப்பட்டது. பின்னர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
உல்மர் எப்படி இறந்தார் என்பதில் தெளிவான தகவல் வெளியாகவே இல்லை. தொடர்ந்து குழப்பமான செய்திகளே வந்தவண்ணம் இருந்தது. இடையில், உல்மர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் ஜமைக்கா காவல்துறை அறிவித்தது.
ஆனால் இப்போபாது தனது நிலையிலிருந்து மாறி, உல்மர் இயற்கையாகத்தான் மரணமடைந்திருப்பதாக ஜமைக்கா காவல்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து ஜமைக்கா காவல்துறை ஆணையர் லூசியஸ் தாமஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு பாப் உல்மரின் கொல இயற்கையானதுதான் என்று அறிக்கை கொடுத்துள்ளது.
உல்மர் மரணம் தொடர்பாக மிகவும் விரிவான முறையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், உல்மர் கொலை செய்யப்பட்டதற்கான எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.
தற்போது நிபுணர் குழு இயற்கையான முறையில்தான் உல்மர் இறந்தார் என்று உறுதியாக கூறியுள்ளது. இதன் மூலம் உல்மர் கொலை செய்யப்படவில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது.
இதுகுறித்து உல்மரின் மனைவிக்கும், குடும்பத்திற்கும் தெரிவித்து விட்டோம். இந்த வழக்கு இத்துடன் முடிவுக்கு வருகிறு என்றார்.
உல்மர் இயற்கையான முறையில்தான் இறந்திருக்கிறார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரது மனைவி கில் நிம்மதி தெரிவித்துள்ளார்.
உல்மர் கொலை செய்யப்படவில்லை என கடந்த மாதமே ஸ்காட்லாண்ட் யார்ட் போலீசாரும் திட்டவட்டமாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உல்மரை கொலை செய்ததாக பாகிஸ்தான் அணியின் சில வீரர்கள் மீதும், அணி நிர்வாகிகள் சிலர் மீதும், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது நினைவுகூறத்தக்கது.













Click it and Unblock the Notifications