காங்-கம்யூ இடையே சமாதான தூதராக கருணாநிதி
டெல்லி:ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக இன்றும் பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் இடதுசாரிக் கட்சி தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் தலைமையினாலான கூட்டணி பிரணாப் முகர்ஜி, அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீல், கரன்சிங், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரது பெயர்களை பரிசீலித்து வந்தாலும் இவர்களை இடதுசாரிகள் ஏற்க மறுத்துவிட்டதால் சிக்கல் உருவாகியுள்ளது.
இதில் பிரணாப் முகர்ஜியை இடதுசாரிக் கட்சிகள் தீவிரமாக ஆதரித்ததால் சோனியாவே அவரை ஓரம் கட்டிவிட்டார். சிவராஜ் பாட்டீலை வேட்பாளராக்கலாம் என சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தீர்மானித்தனர். ஆனால் இதற்கு கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் இடதுசாரி தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
இந்த விவகாரத்தில் சுமூக நிலையை எட்ட முதல்வர் கருணாநிதியின் உதவியை காங்கிரஸ் நாடியது. இதையடுத்து கடந்த இரு நாட்களாக டெல்லியில் தீவிர ஆலோசனைகளில் இறங்கியுள்ளார் கருணாநிதி.
பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவை நேற்றிரவு சந்தித்த அவர் இன்றும் அவர்களை சந்தித்துப் பேசினார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பரதன், ராஜா ஆகியோர் தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து கருணாநிதியை சந்தித்தனர்.
பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக்ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதே போல காங்கிரஸின் மூத்த தலைவரும் ஜனாதிபதி பதவிக்கு பெயர் அடிபடுபவருமான கரன் சிங்கும் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. அதன் விவரம்
கேள்வி- ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை உள்ளதா?
கருணாநிதி- நிச்சயம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
கேள்வி-திமுக ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க போகிறது?
கருணாநிதி- காங்கிரஸ் வேட்பாளருக்குதான் ஆதரவு.
கேள்வி- கரன் சிங்,ஷிண்டே, சிவராஜ் பாட்டீல் ஆகிய 3 பேரில் ஒருவர்தான் என்ற ஒருமித்த கருத்து உருவாகியுள்ளதா?
கருணாநிதி- ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் உங்களிடம் தெரிவித்திருப்பேனே.
கேள்வி- ஜனாதிபதி பதவிக்கு நீங்கள் பரீசிலித்திருப்பது காங்கிரஸ் வேட்பாளரா அல்லது வேறு கட்சி வேட்பாளரா?
காங்கிரஸ் வேட்பாளர் தான். நீங்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி விட்டேன் என்று கூறிவிட்டு பிரதமரை சந்திக்கக் கிளம்பிச் சென்றார்.
பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி.
கேள்வி-ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு வந்துவிட்டாதா?
கருணாநிதி- ஆலோசனை முடிவடையும் நிலை வந்துவிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எந்த கட்சியும் மாறவில்லை, மாறப் போவதும் இல்லை. இணைந்து செயல்படுவதன் மூலம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியும். காய் கனிந்து வருகிறது. ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் அவசரம் காட்டக் கூடாது. நாளைக்குள் முடிவு தெரிந்து விடும்.
கேள்வி- இதில் இழுபறி நிலை ஏற்பட காரணம் என்ன, இடதுசாரிகள் ஷெகாவத்தை ஆதரிப்பார்களா?
கருணாநிதி- ஷெகாவத்தை ஆதரிப்பாளர்களா, ஜெயலலிதாவை ஆதரிப்பார்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமான சென்று கொண்டுள்ளன.
கேள்வி- முஸ்லீம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் கொண்டு வருவீர்களா?
கருணாநிதி- தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இன்னும் 1 வாரத்திற்குள் அவர்களிடமிருந்து அறிக்கை பெறுவோம்.
பக்கத்து மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீடு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி- ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?
கருணாநிதி- சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று தலைமை தேர்தல் ஆணையம் எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கேள்வி- மீண்டும் சோனியாவை சந்தித்து பேசுவீர்களா?
கருணாநிதி- நாளை மாலை சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளேன். அதற்கு முன் தேவைப்பட்டால் மீண்டும் சோனியாவை சந்திப்பேன் என்றார் கருணாநிதி.
முன்னதாக இடதுசாரித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதை நானும் வரவேற்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications