தொடர்ந்து சூடாகி வரும் சென்னை!
சென்னை:
சென்னை நகரில் படிப்படியாக வெப்ப நிலை அதிகரித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது வானிலை மாற்றம் என்று கூற முடியாது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குநர் ஆர்.வி.சர்மா இதுகுறித்துக் கூறுகையில், சென்னையில் கோடைகாலம் முடிந்து விட்டது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தக் காலகட்டத்தில் நிலவிய வெயில் மற்றும் மழையின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தபோது, சென்னை நகரில் வெயிலின் அளவு குறையவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதை வானிலை மாற்றம் என்று கூறி விட முடியாது. இருப்பினும் வெயில் குறையாததற்கு என்ன காரணம் என்பதை யோசித்தாக வேண்டும். உலக அளவில் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும்போது கடலோர நகரங்களில்தான் அது முதலில் நிகழும் என்றார்.
கடந்த 1969ம் ஆண்டு முதல் 2006 வரையிலான ஆண்டுகளில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெப்ப நிலை எப்படி இருந்தது என்பது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்துள்ளது.
அதன்படி சென்னை நகரில் குறைந்தபட்ச வெப்ப நிலையின் அளவு 1.5 டிகிரி செல்சியஸ் கூடியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 1969ம் ஆண்டு 32 டிகிரியாக இருந்த வெப்ப நிலை தற்போது 33.5 டிகிரியாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இது 33.5 டிகிரியிலிருந்து 34.5 டிகிரியாக உயர்ந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்ளில் இது 36 முதல் 37 டிகிரியாகவே உள்ளது. இதில் மாற்றம் ஏதும் இல்லை.
மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 34.5 டிகிரியிலிருந்து 36 டிகிரியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரியிலிருந்து 39 டிகிரியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications
