அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால்அன்புடன் வரவேற்போம்: ஜெ.
சென்னை:அதிமுக கூட்டணியில் சேர பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீர்மானித்தால், அவரை பாசத்துடன் வரவேற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு நேற்று ஜெயலலிதா வந்தார். அங்கு பல்வேறு கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் ராமதாஸ் அதிமுக அணிக்கு வந்தால் அவரை வரவேற்போம். பாசத்துடன், உரிய கெளரவத்துடன் அவரை நடத்துவோம் (அப்படியா!!).
காவிரி நீர்ப் பிரச்சினையில் தனது கடமையைச் செய்ய முதல்வர் கருணாநிதி தவறி விட்டார். கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று அந்த மாநில துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பெங்களூருக்குச் சென்று ஓய்வு எடுக்கிறார் கருணாநிதி.
அங்கு கர்நாடக முதல்வரைச் சந்தித்து தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கேட்பதற்கு அவருக்கு நேரம் இல்லை.
தயாநிதி மாறன் மீதான ரூ. 10 ஆயிரம் கோடி மோசடி குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் புகாரை அவர்களே சொல்லியிருப்பதால் உண்மையாகத்தான் இருக்கும். இதுபற்றி அமைச்சர் ராசாதான் விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.
இப்போது ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்துகிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்பதையும் இந்த விவகாரத்தில் உண்மை நிலைமையையும் திமுக விளக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். எங்களது அணியின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஓம் பிரகாஷ் செளதாலா வீட்டில் நடைபெறும்.
கொல்கத்தாவில் நந்திகிராமம் பிரச்சினையில் மேற்கு வங்க அரசை எதிர்த்து பேரணி நடத்தவுள்ளார் மம்தா பானர்ஜி. அதில் நானும் பங்கேற்க வேண்டும் என்று கோரி என்னைப் பார்க்க வந்தார். ஆனால் நான் அந்த பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications