தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவோம்: கர்நாடகம்
பெங்களூரு:தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கண்டிப்பாக திறந்து விடுவோம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் அடை மழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதையடுத்து அதிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்புப் தெரிவித்து மைசூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து துணை முதல்வர் எதியூரப்பா இதை நிறுத்த உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் தேசிய ஒருமைப் பாட்டுக்கு தீங்கு செய்யும் வகையில் கர்நாடக அரசு விரோதமாக செயல்படுவதாகவும், இந்த பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க முடிவு எடுக்க வேண்டும் எனவும் கருணாநிதி அதில் கோரியிருந்தார்.
இந்த கடிதம் குறித்து கர்நாடக முதல்வரிடம் நிருபர்கள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். ஆனால், முதலில் பதிலளிக்க மறுத்தவர் பிறகு அளித்த பேட்டியில்,
காவிரியில் தண்ணீர் திறந்து விடாததற்கு தமிழக முதல்வர் கவலைப்பட வேண்டாம். மேலும் இயற்கை நமக்கு ஒத்து செயல்படுவதால் கபினி, ஹாரங்கி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகள் நிரம்பி வருகின்றன.
இந்த பிரச்சனையை அரசியலாக்க விரும்பவில்லை. கலைஞர் மூத்த தலைவர். அவருக்கு நான் அறிவுரை சொல்லத் தேவையில்லை. பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதவே தேவையில்லை. என்னிடமே இதைப்பற்றி தெரிவித்திருக்கலாம்.
இந்த விவகாரத்தில் இரு மாநில விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இயற்கை நமக்கு ஒத்துழைப்பதால் தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications