ஜெயலலிதாவுக்கு வைர நெஞ்சம்!
சென்னை:நாங்கள் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை மதிப்பவர்கள், மற்றவர்களை மதிக்க தெரிந்தவர்கள் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதியில், தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகளை மாற்றியது.
தேர்தல் முடிந்தவுடன் அதே அதிகாரிகளை தமிழக அரசு மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்தியது.இதை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடக்கும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,
கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கண்ணுசாமி என்பவரை தேர்தல் ஆணையம் மாற்றியது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அப்போதைய அம்மா (ஜெயலலிதா) அரசு அதே கலெக்டரை மீண்டும் நியமித்து உத்தரவிட்டது.
இதேபோல் தான் மாநகர காவல் துறை ஆணையாளர் விஜயகுமார், மைலலாப்பூர் உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோரையும் மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் முடிந்த பின் அதிமுக அரசு அவர்கள் அனைவரையும் மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்தியது.
இதே போல் தான் சாத்தான்குளம் இடைத்தேர்தலின் போதும், பல அதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரையும் தேர்தல் முடிந்தவுடனே, ஜெயலலிதா மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தினார்.
இதெல்லாம் இவர்களுக்கு நினைவில்லை போலும், ஆனால் திமுக அரசு இவர்கள் பாணியை பின்பற்றினால் மட்டும் தவறாக தெரிகிறது. அப்படியென்றால் இவர்களின் ஆட்சி முறைகேடான ஆட்சியா.
இந் நிலையில் இவர்கள் மதுரையில் செய்யப்போகும் போராட்டத்துக்கு சிலர் (வைகோ) ஆதரவு தரவும் முன்வந்திருப்பதை பார்த்தால் எனக்கு, உடுமலை கவிராயர் பாடியிருக்கும் வெட்கமில்லை வெட்கமில்லை என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
கேள்வி: நீங்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், உங்கள் கூட்டணியை பிளக்க பாடுபட்டவர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டீர்களே?
பதில்: நாங்கள் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை மதிப்பவர்கள், மேலும் இவர்கள் சொன்ன இந்த குற்றசாட்டை தீர ஆராய்ந்து அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் விதமாக இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மற்றவர்களை மதிக்க தெரிந்தவர்கள்
கே: கூட்டுறவு தேர்தலை ரத்து செய்தால் போதாது, உள்ளாட்சித் தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே?
ப: நல்ல வேளை சட்டமன்ற தேர்தல், 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு புதியதாக தேர்தல் நடத்த சொல்லாமல் விட்டாரே
கே: நீங்கள் எந்தவொரு கோரிக்கையும் வலுவாக இருந்தால் உடனே வளைந்து கொடுக்கிறீர்களே. அம்மா எதற்கும் அசைந்து கொடுக்காமல் வைர நெஞ்சம் கொண்டவராக இருக்கிறாரே?
ப: அது சரிதான். அம்மாவுக்கு வைர நெஞ்சம் தான். இல்லையென்றால் இவரின் ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் மேல் டெஸ்மா, எஸ்மா சட்டத்தை போட்டு சஸ்பெண்ட் செய்தது, மேலும் பொடாவை அதிகாரத்தை மீறி பயன்படுத்தியது, அப்பாவி சாலை பணியாளர்கள் 10,000 பேரை வீட்டுக்கு அனுப்பியது, இதில் 100-க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டது, இதிலேயே அவரின் வைர நெஞ்சத்தை தமிழகமே அறிந்ததை மறக்க முடியுமா?
கே: ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவிடம் பாஜக ஆதரவு கேட்டுள்ளதே?
ப: இதற்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் வாஜ்பாய் அவர்கள், ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருப்பது எனது அரசியல் வரலாற்றிலேயே மிகவும் வேதனையான காலம் எனத் தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜக அரசை கவிழ்க்க பிளாக் மெயில் செய்து தினமும் ஒரு அறிக்கையை அப்போது வெளியிட்டு வந்தார் ஜெயலலிதா. இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
கே: அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காலத்தில், ராமதாஸ் அவர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க போயஸ் தோட்டத்துக்கு போனபோது பல மணிநேரம் காத்திருக்க வைத்தாராம். ஆனால் இப்போது ராமதாஸ் வந்தால் பாசத்துடன் வரவேற்போம் என சொல்லியது பற்றி உங்கள் கருத்து?
ப: ராமதாஸ் அவர்களுக்கு என்னைப் பற்றியும் தெரியும், அம்மாவை பற்றியும் தெரியும். ஜெயலலிதா சொல்லியது பற்றி ஏற்கனவே ராமதாஸ் வருத்தம் தெரிவித்து விட்டார்.
கே: அதிமுக ஆட்சியில் மின்சாரத்தின் உற்பத்தித்திறன் தேவையின் அளவைவிட அதிகளவு இருந்ததாக கூறியுள்ளாரே?
ப: அவர் சொன்ன 10,098 மெகாவாட் உற்பத்தித்திறன் என்பது காற்றாலை மூலம் உண்டாகும் 3000 மெகாவாட் மின்சாரத்தையும் சேர்த்துத் தான் சொல்கிறார். ஆனால் வெயில் காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் காற்றாலை மூலம் 3 மெகாவாட் கூட உற்பத்தியாகாது. மேலும் கோடை காலங்களில் மின் தடை ஆங்காங்கு இருந்தது உண்மைதான்.
இப்போது 10 ஆயிரம் புதிய டிரான்ஸ்பார்மர்கள் வாங்கி அனைத்து இடங்களிலும் மாற்றியமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. இது அதிமுக ஆட்சி காலத்தில் அமைய வேண்டிய திட்டம். ஆனால் அவர்களின் கவனக்குறைவான ஆட்சியினால் வாங்க வேண்டிய 14 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கிடப்பில் போடப்பட்டது. இப்போது அந்த பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் அனைவரும் தடையில்லா தொடர் மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என ஆற்காட்டார் ஜெயலலிதாவுக்கு பதிலளித்துவிட்டார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications