தஞ்சாவூர் சோகம்.. நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பலி.. மேலும் ஒருவர் படுகாயம்!
தஞ்சை: தஞ்சாவூரில் நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு அரசின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி சின்னபொண்ணு உயிரிழந்துள்ளார்.
மேலும், சகுந்தலா என்பவர் காயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்முதல் செய்த மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு அனுப்பாமல் வைத்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் ஆர். சுத்திப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழகத் திறந்தவெளி குடோனில், இன்று திடீரென நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் சின்னப்பொண்ணு (51) என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறிப் பலியானார். மேலும் சகுந்தலா என்ற பெண் பலத்த காயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் அலட்சியத்தால் தான் பெண் தொழிலாளி பலியாகிவிட்டார் என்றும், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை உடனுக்குடன் அரவைக்கு அனுப்ப வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.













Click it and Unblock the Notifications