3 வருஷம் காத்திருந்த படம்... 48 மணி நேரத்திலேயே ஓடிடியில் இருந்து மாயம்! பிரபல நடிகர் படத்துக்கு என்ன நடந்தது?
சென்னை: சினிமா வரலாற்றிலேயே அரிதாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றுதான் ஓடிடியில் இப்போது நடந்திருக்கிறது. மூன்று வருடங்களாக சட்டப் போராட்டம், சென்சார் சிக்கல், பெயர் மாற்றம் என்று எத்தனையோ தடைகளை தாண்டி ரசிகர்களை சந்தித்த படம்... ஆனால் வெளியான இரண்டு நாளுக்குள்ளேயே ஓடிடியில் இருந்து காணாமல் போய்விட்டது. இதுதான் இப்போது பாலிவுட்டிலும் ஓடிடி ரசிகர்களிடமும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் 'சட்லஜ்' (Satluj) திரைப்படத்தின் நிலை.
தில்ஜித் தோசான்ஜ் படத்தின் நிலை
பாலிவுட்டின் முன்னணி நடிகரான தில்ஜித் தோசான்ஜ் நடித்துள்ள "சட்லஜ்" படம் சாதாரண கமர்ஷியல் படம் இல்லை. 1990-களில் பஞ்சாபில் நடந்த மனித உரிமை மீறல்கள், மர்ம மாயங்கள் மற்றும் அந்த கால அரசியல் சூழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சமூக ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் இது.
ஆரம்பத்தில் இந்த படத்துக்கு 'கல்லுகாரா' என்று பெயர் வைக்கப்பட்டது. பிறகு 'Punjab 95' என்று மாற்றப்பட்டது. அதற்கும் எதிர்ப்புகள் எழுந்தன. சென்சார் போர்டு பல காட்சிகளை நீக்க வேண்டும், வரலாற்று குறிப்புகளை மாற்ற வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனால் படம் பல ஆண்டுகள் ரிலீஸே ஆகாமல் கிடந்தது.

பட தலைப்பு பிரச்சனை
ஒரு கட்டத்தில், படத்தின் பெயரையே 'சட்லஜ்' என்று மாற்றிய பிறகுதான் வெளியீட்டுக்கான வழி கிடைத்தது. மூன்று ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்கள், கடந்த ஜூலை 3-ம் தேதி Zee5 தளத்தில் படம் வெளியானதும் ஆர்வமாக பார்க்க தொடங்கினர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
ஓடிடியில் இருந்து நீக்கம்
வெளியான 48 மணி நேரத்திலேயே இந்தியாவில் இருந்து படம் திடீரென நீக்கப்பட்டது. இதனால் "என்ன நடந்தது?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்தது. படம் பார்த்தவர்கள் கூட பாதியிலேயே படம் காணாமல் போனதாக பதிவுகள் வெளியிட்டனர்.
இதுகுறித்து ஓடிடி தரப்பு விளக்கம் அளித்தபோது, இந்தியாவில் இந்த படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்று மட்டும் தெரிவித்துள்ளது. அதாவது படம் நிரந்தரமாக நீக்கப்பட்டதா, தற்காலிகமாக நிறுத்தப்பட்டதா என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
தில்ஜித் தோசான்ஜ் கடந்த சில ஆண்டுகளாக சமூக கருத்துகள் பேசும் கதைகளை செலக்ட் செய்து நடித்து வருகிறார். அதனால் இந்த படமும் வெளியாகும் முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால், இந்திய ரசிகர்களும் ஓடிடி ரிலீஸை ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஓடிடியில் இருந்து மறைந்த சம்பவம், படத்தை விட பெரிய விவாதமாக மாறியுள்ளது. "மூன்று வருஷம் காத்திருந்து வெளியான படம்... இரண்டு நாள்கூட ஓடவிடலையே!" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் கருத்து
இப்போது அனைவரும் எதிர்பார்ப்பது ஒன்றுதான். 'சட்லஜ்' மீண்டும் இந்தியாவில் ஓடிடிக்கு திரும்புமா? இல்லை இந்த சட்டப் பிரச்சனை இன்னும் நீளுமா? என்ற கேள்விக்கான பதில்தான் அடுத்த சில நாட்களில் தெரியவரும். அதுவரை, 48 மணி நேரத்தில் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட படம் என்ற புதிய சாதனையோடு 'சட்லஜ்' சினிமா உலகில் பேசப்படும் படமாக மாறியுள்ளது.
ஏற்கனவே முதல்வர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் இதுபோல ரிலீஸாவது பல மாதங்களாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல சென்சார் பிரச்சனையில் சிக்கி சின்னா பின்னமான இந்த படத்தில் என்னதான் கதை? எதனால் தான் இப்படி திடீரென தூக்கி விட்டார்கள் என்று பலர் நொந்து கொள்கிறார்கள்.














Click it and Unblock the Notifications