கொரோனா ஊரடங்குக்கு பிறகு முதல் முறையாக டப்பாவாலா சேவை ரத்து.. மும்பை கனமழை காரணமாக மிக அரிய நிகழ்வு!
மும்பை: மும்பையின் அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும் 'டப்பாவாலா' உணவு விநியோக சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக டப்பாவாலா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, இப்போதுதான் டப்பாவாலா சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் விடாமல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான டப்பாவாலாக்கள் தங்களின் பயணங்களுக்கு சைக்கிள்களையும், ரயில்களையும் தான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள்.

வெள்ள நீரில் சைக்கிளில் செல்வது ஆபத்தானது என்பதால் அவர்களின் பாதுகாப்பைக் கருதி டப்பாவாலா சேவலை நிறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதும் இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட ஒரு முக்கியக் காரணம்.
மும்பை நகரில் சுமார் 136 ஆண்டுகளாக, வீடுகளில் சமைத்த உணவுகளை டப்பாக்களில் போட்டு அதனை வீட்டிலிருந்து பெற்று, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை சுமார் 3000 டப்பாவாலாக்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் மூலமாக நாள்தோறும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் உணவு டப்பாக்கள் உரியவர்களுக்குக் கிடைத்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் வெயில், மழை, குளிர் எனப் பார்க்காமல் வாடிக்கையாளர்களின் வீடுகளிலிருந்து உணவு டப்பாக்களைச் சேகரித்து, அவரவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு கொண்டு போய்க் கொடுத்து வருகின்றனர் இந்த டப்பாவாலாக்கள். இதுவரை ஒரு தவறு கூட நடைபெறாத, இடைநின்றதே இல்லாத இந்த டப்பாவாலா சேவை உலக அளவில் புகழ் பெற்றது.
136 ஆண்டுகளாக ஒரு தவறு கூட இல்லாமல் இயங்கி வரும் மும்பை டப்பாவாலாக்களின் 'லாஜிஸ்டிக்ஸ்' மேலாண்மை உலக நாடுகளையே வியக்க வைக்கக்கூடியது. உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமே டப்பாவாலாக்களின் துல்லியமான மேலாண்மையைக் கண்டு வியந்து 'சிக்ஸ் சிக்மா' சான்றிதழ் வழங்கிப் பாராட்டியுள்ளது. அதாவது, இவர்களின் சேவையில் 60 லட்சம் டெலிவரியில் ஒரே ஒரு தவறு நடப்பதற்கே வாய்ப்பு உள்ளது (99.9999% துல்லியம்).
2005 ஆம் ஆண்டு மும்பையை உலுக்கிய பெருவெள்ளம், அதற்குப் பிறகு கொரோனா பேரிடர் காலம் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், டப்பாவாலாக்கள் தங்களது சேவையை நிறுத்துவது என்பது மும்பை வரலாற்றிலேயே மிக மிக அரிய ஒரு நிகழ்வாகும். அந்தவகையில் தற்போது கனமழை வெள்ளம் காரணமாக டப்பாவாலாக்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், சூழல் சீரானதும் இந்தச் சேவை மீண்டும் எப்போது தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அலுவலகம் சென்ற பல மும்பைவாசிகள் தங்களின் வீட்டுச் சாப்பாட்டை மிஸ் செய்து, மாற்று வழிகளைத் தேடி அலைந்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications