17 வருடம் தலைமறைவாக இருந்த இன்னொரு நக்சல்கைது: விபி.சிங், கருணாநிதிக்கு குண்டு வைத்தவர்!
சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 1990ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் வி.பி.சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைத்து விட்டுத் தப்பிய நக்சலைட் 17 ஆண்டு தலைமறைவுக்குப் பின் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 1988ம் ஆண்டு தமிழர் பாசறை என்ற நக்சலைட் அமைப்பு சில தமிழ் தீவிரவாத அமைப்பினர் உருவாக்கினர். தமிழகம் தனி நாடாக வேண்டும், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
தங்களது நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டனர். 1990ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கர் கவிஞர் மாளிகையில், தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.
இதில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தனர். காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கவிருந்தது.
இந்த நிலையில் காலை ஆறே முக்கால் மணியளவில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பின்புறம் வெள்ளை நிறத்திலான கேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பார்த்தபோது அது டைம் பாம் என்று தெரிய வந்தது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த குண்டை செயலிழக்க வைத்தனர். குண்டுக்கு அருகே துண்டுச் சீட்டு ஒன்றும் இருந்தது. அதில், தமிழர் பாசறை அமைப்பின் பிரசார வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த வழக்கை கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த குண்டு வைப்பு தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த சுகுமாறன், இளங்கோ, சண்முக சுந்தரம், சந்திரன், ராபர்ட், இன்னொரு சண்முக சுந்தரம், சதீஷ் என்கிற வேலு, டென்னிசன், மன்னார்குடியைச் சேர்ந்த ராஜா என்கிற அய்யப்பன், நெய்வேலி அரிமா நம்பி, தஞ்சை அப்துல் கலாம், கோவை ஆழ்வார் என்கிற சந்திரன் ஆகிய 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவர்களில் சதீஷ் மற்றும் அப்துல் கலாம் ஆகிய இருவர் 1992ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். சந்திரன் என்கிற ஆழ்வார் இயற்கையாக மரணமடைந்து விட்டார். மற்ற 11 பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த 1997ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. சதீஷுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் அப்துல் கலாமுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த 11 பேரையும் போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த வேட்டையில் தற்போது ராஜா என்கிற அய்யப்பன் சிக்கியுள்ளார்.
இவரது தந்தை பாலசுப்ரமணியம் துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலங்கைத் தமிழர்களுக்காக தெருத் தெருவாக துணி, பணம் உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்பி வந்தார் ராஜா. பின்னர் தமிழர் பாசறையில் சேர்ந்து நக்சலைட் ஆனார். திருமணம் செய்து கொள்ளாத ராஜா, பி.எஸ்.சி படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ராஜா, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் அவரை 25ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார்.
கடந்த 17 வருடங்களாக சென்னையில்தான் வசித்து வந்துள்ளார் ராஜா. ராஜாவின் சகோதரிக்கு மட்டுமே அவர் தங்கியிருந்த இடம் தெரியுமாம். அவர் மூலமாக போலீஸார் காதுகளுக்கு இந்தத் தகவல் தெரிய வர வளைத்துப் பிடித்துக் கைது செய்து விட்டனர்.
நேற்று நீதிமன்றத்தில் இன்னொரு வினோதமும் நடந்தது. ராஜாவின் மன்னார்குடி வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வருபவர் ராஜசேகரன். ராஜாவும், இவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.
நேற்று ராஜாவுக்காக ராஜசேகரன்தான் வக்கீலாக ஆஜரானார். நண்பர்களில் ஒருவர் தீவிரவாதியாகவும், இன்னொருவர் வக்கீலாகவும் நீதிமன்றத்திற்கு வந்தது சினிமா கதை போல இருந்தது.












Click it and Unblock the Notifications