கூட்டுறவு சங்கத் தேர்தல் கூண்டோடு ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தில் நடந்த முதல் கட்ட தேர்தல் மற்றும் இனி நடக்கவுள்ள நான்கு கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 7ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் திமுகவினர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், மற்ற கட்சியினர் அடித்து விரட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்களும் கூட பல இடங்களில் தாக்கப்பட்டனர். உச்சகட்டமாக சேலம் மாவட்டம் ஓமலூரில், பாமக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பாமகவினரை போலீஸாரும், திமுகவினரும் கடுமையாகத் தாக்கினர். இதனால் ஆவேசமடைந்த பாமகவினர், திமுகவினருடன் இனி எந்தத் தொடர்பும் கிடையாது என்று அறிவித்தனர்.

நடந்தது தேர்தலே அல்ல, இதை ரத்து செய்து விட்டு மீண்டும், பலத்த பாதுகாப்புடன் நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இப்படி அடுத்தடுத்து பிரஷர் அதிகரித்து வந்த நிலையில் கூட்டுறவுத் தேர்தலை மொத்தமாக ரத்து செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், கூட்டுறவு அமைப்புகள் என்பவை ஒரு நல்ல நோக்கத்துடன் கட்சி அடிப்படையில், இல்லாமல் மக்களின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டு நடைபெற வேண்டியவை என்ற கருத்தோடு, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வந்தது.

இப்போதும் அதே நோக்கத்தோடுதான் கூட்டுறவு அமைப்புகளின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பி, அதற்கான அறிவிப்பைச் செய்தது.

இடையில் பல ஆண்டு காலம் கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறாமல் அதிகாரிகளின் ஆளுகையின் கீழ் கூட்டுறவு அமைப்புகள் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையை மாற்றி திமுக தேர்தல் அறிக்கையில், அறிவித்தவாறு மீண்டும் கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்று முயற்சி யெடுத்து, அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அதன் ஆதரவுக் கட்சிகளும் இந்த கூட்டுறவுத் தேர்தலில் பங்கு பெற முடியாதென புறக்கணித்து விட்டன. அதற்குக் காரணம் எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையான புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதை சட்டப்படி நிறைவேற்ற முடியாத சூழ்நிலைதான்.

கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள்தான் சேர்க்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையின்படி செயல்பட வேண்டியிருந்ததால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க இயலாமல் போனது.

நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் பல இடங்களில் பதவிப் பொறுப்புக்கு வருவதில் ஏற்பட்ட போட்டிகளில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடைபெற்று, வெளியூரிலிருந்த நான் அதைக் கேள்விப்பட்டு தோழமைக் கட்சிகளோடு தொடர்பு கொண்டு தேர்தலை சுமூகமாக நடத்த வேண்டும் என்று தலைமைக் கழக நிர்வாகிகளிடமும், மாவட்ட கழக நிர்வாகிகளிடமும் கேட்டுக் கொண்டேன்.

அப்படிக் கேட்டுக் கொண்டும் கூட, அவர்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றியடையாமல் ஆங்காங்கு சில கசப்பான நிகழ்வுகள் உருவாகி விட்டன என்பதை காணும்பொழுதும், கேட்கும்பொழுதும் எந்தக் குறிக்கோளுக்காக கூட்டுறவு அமைப்புகளின் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள், மக்களின் தேவைகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கருதினேனோ, அதற்கு மாறாக ஆங்காங்கு தோழமை உணர்வு குலைந்து பகையுணர்ச்சி தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கூட்டுறவு அமைப்புகளின் நோக்கத்திற்கே விரோதமானதாக இருப்பதை உணர முடிகிறது.

ஆகவே கூட்டுறவு இயக்கத்தின் தத்துவத்தை உண்மையாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு, அந்த அடிப்படையில், இந்தத் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என கருதுவதால், இதுவரை நடைபெற்றுள்ள மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் அனைத்துத் தேர்தல்களும் ரத்து செய்யப்படுகிறது.

தேர்தலை எந்த முறையில் புதிதாக நடத்துவது என்பதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொள்வதற்கு, சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனையைப் பெற்று அதன் பின்னர் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு முறைப்படி தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+