இது முழுக்க முழுக்க மோசடி..மோசடி..: ராமதாஸ்
சென்னை:தமிழகத்தில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை கடுமையாக கண்டித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கூட்டுறவு சங்க தேர்தல் எதுக்கு நடக்கிறது என்றே தெரியவில்லை, கூட்டணி கட்சிகள் குறை சொன்னால் அதன் மீது தனி கவனம் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக திமுக தலைவர் கலைஞர் கூறினார்.
இங்கு புகாரோ அல்லது குறையோ சொல்வதற்கு ஏதும் இல்லை, ஏனெனில் அனைத்து பத்திரிக்கைகளிலும் கூட்டுறவு சங்கத் தேர்தல் திமுகவினரின் அராஜகத்தால் நடத்தப்பட்டுள்ளது குறித்து வெளியாகியுள்ளது. இந்த அட்டூழியத்துக்கு அதிகாரிகளும் துணை போனது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இதில் நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்பு வேலைகள் எல்லாம் நடத்த வேண்டாம். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராசன் அவர்கள் கூறியது போல் 90 விழுக்காடு முறைகேடான தேர்தல் தான் நடைபெற்றது என்பதையும் நானும் ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திமுக அமைச்சர்கள் முறைகேடாக தேர்தல் நடந்த ஒருசில பகுதிகளில் மட்டும் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்கள். இதை கூட்டணி கட்சியான பாமக ஏற்காது.
நிறைய இடங்களில் தேர்தல் அதிகாரிகள் திமுக வேட்பாளரின் மனுக்களை மட்டும் பெற்றுள்ளனர். இந்த அட்டூழியத்தாலும்,ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காததாலும் மீண்டும் தேர்தல் நடக்கும் வரை தமிழகம் முழுவதும் பாமக கட்சி கூட்டுறவு சங்கத் தேர்தலில் பங்கேற்காது.
மேலும் திமுகவினரின் மோசடியுடன் நடக்கும் இந்த தேர்தலுக்கு துணை போக நான் வர மாட்டேன் என்பதோடு, இதில் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
