பிறந்தது ஆடி-சுற்றுலா கழகத்தின்108 அம்மன் தரிசன ஆன்மீக சுற்றுலா
சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆடி மாதத்தையொட்டி, 108 அம்மன் கோவில் தரிசன சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து நாட்களில் இந்தக் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாதங்களில் முக்கியமான ஆடி மாதம் இன்று பிறந்தது. ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களும், கூழ் ஊற்றி, பொங்கல் வைக்கும் வைபவங்களும்தான் நினைவுக்கு வரும். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விசேஷமாக இருக்கும்.இதை உரிய முறையில் பயன்படுத்தி, ஆன்மீக சுற்றுலா ஒன்றுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 108 அம்மன் கோவில்களுக்கு ஐந்து நாள் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான திட்டத்தை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னையிலிருந்து இந்த ஆன்மீக சுற்றுலா தொடங்குகிறது.
போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்டவற்றை சேர்த்து ஒரு நபருக்கு ரூ. 2,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா கால அளவு 5 நாட்கள் ஆகும்.
சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவில் முன்பு இந்த ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மீகா சுற்றுலா பயணத்தின் முதல் பேருந்தை சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் சுற்றுலாத் துறை இயக்குநரான ராஜாராம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற ஒரு ஆன்மீக பயணத்தை நடத்துவது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மட்டுமே. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஆன்மீக சுற்றுலா இல்லை.
ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த ஆன்மீக சுற்றுலாவில் முக்கியமான 108 அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
மொத்தம் 2500 கிலோமீட்டர் தொலைவுக்கு பயண தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கிளம்பி, செங்கல்பட்டு, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், சமயபுரம், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக சென்னையில் பயணம் நிறைவுறும்.
செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடங்கும் பயணம் முறையே சனி மற்றும் வியாழக்கிழமை இரவுகளில் சென்னையில் முடிவடையும்.
இந்த ஆன்மீக பயணத்தை ஆடி மாத ஸ்பெஷலாக அறிமுகப்படுத்திய போதிலும் வருடம் முழுவதும் இந்த டூர் அமலில் இருக்கும் என்றார் ராஜாராம்.












Click it and Unblock the Notifications