கொழும்பில் மனித குண்டுகள் ஊடுறுவல்?
கொழும்பு:வவுனியாவில் உள்ள சிங்கள கிராமத்திற்குள் இன்று அதிகாலை புகுந்து திடீர் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் நான்கு ஊர்க்காவலர்களை சுட்டுக் கொன்றனர்.
இலங்கையின் வட பகுதியில் தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவம் தீவிர தாக்குதலை முடுக்கி விட்டுள்ளது. நேற்று வடக்கில் நடந்த கடும் சண்டையில் 5 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் ராணுவத்திற்கும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில வவுனியா அருகே அமைக்கப்பட்டிருந்த ஊர்க்காவல் படை முகாம் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த முகாமில் இருந்த நான்கு ஊர்க்காவலர்களும் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலிலிருந்து சிங்களர்களைக் காக்க இலங்கை போலீஸார் ஊர்க்காவலர்களை கிராமங்கள்தோறும் நியமித்துள்ளனர். இவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மனித குண்டு ஊடுறுவல்?
இதற்கிடையே, கொழும்பு நகருக்குள் மனித வெடிகுண்டுகள் ஊடுறுவியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதையடுத்து கொழும்பு நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்களை விடுதலைப் புலிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பதாக உளவுப் பிரிவுக்கு வந்த தகவலைத் தொடர்ந்து இந்த உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை டிஐஜி ஜெயந்த விக்ரமரத்னே கூறுகையில், 2 லாரிகள் நிறைய குண்டுகளை நிரப்பி மனித வெடிகுண்டுகளை விடுதலைப் புலிகள் அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
எனவே மக்கள் சந்தேகத்திற்கிடமான வாகனங்களையோ அல்லது நபர்களையோ கண்டால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
கிழக்கை சீரமைக்க ரூ. 6.5 பில்லியன்:
இதற்கிடையே, விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை சீரமைக்க ரூ. 6.5 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் வசம் கடந்த 20 வருடங்களாக இருந்து வந்த கிழக்கு மாகாணம் தற்போது முழுமையாக அரசு வசம் வந்துள்ளதாக ராஜபக்ஷே கூறியுள்ளார்.
இந் நிலையில் கிழக்கு மாகாணத்தை சீரமைக்கும் பணிக்காக ரூ. 6.5 பில்லியன் ஒதுக்கப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இத் தகவலை வேலைவாய்ப்புத் துறைக்கான அமைச்சரும், பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளருமான ககேலியா ரம்புகவெல்லா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தை சீரமைப்பதற்காக 180 நாள் மேம்பாட்டுத் திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 180 நாட்களுக்குள் பொருளாதார வளர்ச்சிக்கான அஸ்திவாரம் போடப்பட வேண்டும் என்று இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.












Click it and Unblock the Notifications