மீண்டும் உடைகிறதா மதிமுக?2 நாளில் நல்ல செய்தி வரும்- ஸ்டாலின்!
கரூர்:மதிமுக எம்.எல்.ஏக்கள் கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காதது குறித்துப் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசியலில் இன்னும் 2 நாட்களில் ஒரு அதிசயம் நடக்கும் என்று புதிர் போட்டு பேசியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக 3வது அணி அறிவித்திருந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த அதிமுகவும், மதிமுகவும் திடீரென தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்தன.
அதிலும் அதிமுக அணியைச் சேர்ந்த நான்கு பேர் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், மதிமுக சட்டசபை கட்சித் தலைவர் கண்ணப்பன், எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாக்களிக்கவில்லை. இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணனைக் குறிப்பிட்டு இன்னும் 2 நாட்களில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும், நல்ல செய்தி வரும் என்று புதிராகப் பேசியுள்ளார் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கரூர் வந்த ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாவட்ட திமுக அலுவலகத்திற்கான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழியும் வழங்கினார்.
பின்னர் வேலாயுதம்பாளையத்தில் அவர் பொதுக் கூட்டத்தில் பேசினார். அவர் கூறுகையில்,
திமுக கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க காரணம், அவர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி கழகத்திற்காக உழைத்தது தான். இது அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் கிடையாது. விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் போராடும் தியாகி ஊதியத்தை எதிர்பார்ப்பது கிடையாது. அதுபோலத்தான் திமுக விற்காக உழைத்தவர்களும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எனக்குத் தெரியாமலேயே அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்து விட்டனர் என்று ஜெயலலிதா கூறுவது வெட்கக்கேடானது. அதிமுகவைச் சேர்ந்த நான்கு பேர் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அவர்கள் யார் என்று கலைஞரிடம் கேட்டால் இன்னார் என்று அவர் கூறுவார். நமது கணக்குப்படி 167 ஓட்டுக்கள்தான் வர வேண்டும். ஆனால் 171 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
இவர்களைப் போலவே மதிமுகவைச் சேர்ந்த கண்ணப்பனும், கம்பம் ராமகிருஷ்ணனும் வாக்களிக்கவில்லை. அவர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறப்பட்டது.
உடல் நலம் சரியில்லையா உள்ளம் சரியில்லையா என்று தெரியவில்லை. தமிழக அரசியலில் இன்னும் 2 நாட்களில் மாற்றம் நடக்கும். ஒரு அதிசயம் நடக்கும். நல்ல செய்தி வரும். அது என்ன என்று இப்போது கேட்காதீர்கள். அது சஸ்பென்ஸ்.
உலகிலேயே தொடர்ந்து ஐம்பது வருடம் சட்டமன்றத்தில் பணியாற்றிய பெருமை கலைஞரையே சாரும். 1957 முதல் இன்று வரை பல தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார் கலைஞர்.
ஜெயலலிதா, இனியும் தேவையில்லாமல் கலைஞரை கொச்சைப்படுத்தி பேசுவது, அநாகரீகமாக பேசுவது, கிண்டல் செய்வது, தேவையின்றி விமர்சனம் செய்வது, கொச்சைப்படுத்தி அறிக்கை விடுவது ஆகியவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவராக நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது. ஜெயலலிதா யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார் ஸ்டாலின்.
ஸ்டாலின் பேச்சைப் பார்த்தால் மதிமுகவில் ஏதோ நடக்கப் போகிறது, அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டு விட்டதாக சந்தேகம் எழுகிறது.












Click it and Unblock the Notifications