திமுக-அதிமுகவுக்கு கேப்டன் மீண்டும் சவால்!
கோவை:தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தைரியம் இருந்தால் தேமுதிகவைப் போல தனித் தனியாக தேர்தலை சந்திக்கட்டும் பார்க்கலாம் என்று விஜயகாந்த் மீண்டும் சவால் விட்டுள்ளார்.
கோவையில் பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்,
கூட்டணி என்ற பெயரில் மக்களை சுரண்டுவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தைரியம் இருந்தால் தேமுதிகவைப் போல தனித் தனியாக தேர்தலில் நிற்க தயாரா?
நாங்கள் மக்களை மட்டுமே நம்பியுள்ளோம். மக்கள்தான் எங்களுக்குத் துணை. மக்களுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். தேமுதிக இப்போது மட்டுமல்ல எப்போதுமே யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது. எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.
தனி ஒரு நபரால் சாதனை நிகழ்த்த முடியும் என்பதை மகாத்மா காந்தி உலகுக்கே உணர்த்திக் காட்டினார். அவரது வழியில்தான் இப்போது நானும் போய்க் கொண்டுள்ளேன்.
சரியான நேரம் வரும் வரை நான் பொறுமையுடன் காத்திருப்பேன். காலம் கண்டிப்பாக எங்களுக்குச் சாதகமாக கனியும்.
என்னைப் பார்த்து எல்லோருக்கும் பயம். ஒரு தனியார் டிவி சானல், எனது படங்களைப் போடுவதே இல்லை. காரணம், எனது பாப்புலாரிட்டி வளர்ந்து விடும் என்ற அச்சம்தான். அப்படியே எனது படத்தைப் போட்டாலும் கூட அதில் வரும் அரசியல் வசனங்கள், தொடர்புடைய காட்சிகளை வெட்டி விடுகிறார்கள்.
கழகம்தான் எனது வீடு என்றார் அண்ணா. ஆனால் அதே கழகத்தின் இன்றைய தலைவரான கருணாநிதியோ, அதை தனது குடும்ப சொத்தாக்கிவிட்டார். குடும்பத்தினரைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்.
உட்கார்ந்த இடத்திலேயே மத்திய அரசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல பிரச்சினைகளைத் தீர்க்கிறார் கருணாநிதி.
ஆனால் சேலம் ரயில்வே கோட்டைத்தைக் கொண்டு வர மட்டும் அவரால் முடியவில்லை என்றார் விஜயகாந்த்.