வைகுண்டத்துக்கு 1,000 ஏக்கர்: டாடாவிடம்பேசிய ஜெ- புட்டு புட்டு வைக்கும் கருணாநிதி
சென்னை:டாடா நிறுவனத்தின் டைட்டானியம் தொழிற்சாலை அமைவதற்கு, டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின், மாவட்ட கலெக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கையெழுத்து போடாமல் பைலை திருப்பி அனுப்பியதாக ஜெயலலிதா கூறியிருப்பதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
டாடா நிறுவனம் தொடர்பான கோப்பில் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அடடா என்னே உண்மை, என்னே சத்திய வாக்கு. ஒரு பொய்யை ஒன்பது முறை திருப்பி திருப்பி சொன்னால் அது அம்மையாருக்கு உண்மையாகிவிடும் போலும். ஜெயலலிதா அறிக்கையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நில ஆர்ஜிதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பசப்புகிறார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
இதோ பல்லை உடைக்கும் பச்சை உண்மைகளை பாரீர்!. டாடாவுடன் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2002ம் ஆண்டு டைட்டானியம் தொழிற்சாலைக்காக டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
அதிமு ஆட்சியில் நில ஆர்ஜிதம் செய்ய முடிவு:
இதோ ஜெயலலிதா ஆட்சியின் பைல்களில் உள்ளபடி மாவட்ட கலெக்டரின் கருத்துரைகள்:
கடந்த 2002ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 08.08.2005 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 12,500 ஏக்கர் நிலங்களை இத்திட்டத்திற்காக கையகப்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளார். அதன் பிறகு 30.09.2005 தேதியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அந்த மாவட்டத்தில் 3,263 ஏக்கர் நிலங்களை சட்டப்படி கையகப்படுத்த பரிந்துரை செய்துள்ளார்.
தொழிற்சாலை அமையக்கூடிய அந்த 2 மாவட்டங்களின் கலெக்டர்களும், அம்மையாரின் கூற்றுப்படி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்களா? அல்லது அந்தத் தொழிற்சாலை வருவதை வரவேற்றுள்ளார்களா?.
அபாண்ட ஜெயலலிதா:
ஆனால் ஜெயலலிதா, எருமை மாட்டுத் தோலில் வடிகட்டிய பொய்யைச் சொல்லி அதுவும் மாவட்ட கலெக்டர்கள் பெயரை இழுத்து, அவர்கள் அந்தத் தொழிற்சாலை வருவதை மறுத்ததாக அறிக்கை விடுவது எவ்வளவு பெரிய அபாண்டம், எவ்வளவு பெரிய பித்தலாட்டம்.
இவரெல்லாம் ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வராக 5 ஆண்டு காலம் பதவி வகித்தவர் என்றால் மக்கள் நம்புவார்களா. வாய்விட்டு சிரிக்க மாட்டார்கள்?
27.05.2002 அன்று டாடா நிறுவனத்துடன் ஜெயலலிதா ஆட்சியின்போது தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒரு தொழில்நுட்ப-வர்த்தக சாத்தியக்கூறு, ஆய்விற்கு மட்டுமே அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தற்போது ஜெயலலிதா கூறுவது ஒரு தவறான திசை திருப்பும் செயல்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்று அவர் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் பத்தி 6.2 (பி) தெளிவாக பின்வருமாறு குறிப்பிடுகிறது.
அதாவது தமிழக அரசு இத்திட்டத்திற்கான நில ஆர்ஜிதத்தை உறுதியாக மேற்கொண்டு எவ்வளவு நிலம் தேவையோ அந்த அளவிற்கு அரசே ஆர்ஜிதம் செய்து டாடா நிறுவனத்திடம் சுரங்கப் பணிகளுக்காகவும், அதனையொட்டி நடவடிக்கைகளுக்காகவும், குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவதற்காகவும் ஒப்படைக்கும்.
இளைத்தவன் நான் தானே:
இந்த ஒப்பந்தம் போட்டபோது இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிற நல்லோர் அப்போது அமைதியாகத் தான் இருந்தார்கள். இன்று போல் எந்த அறிக்கையோ, ஆர்ப்பாட்டமோ கிடையாது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பார்களே, அது இது தானே. அந்த ஆண்டி நான் தானே.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு மாவட்ட ஆட்சி தலைவர்கள் பரிந்துரையின் பேரில் அதிலே அம்மையார் அக்கறை காட்டவில்லை என்று அவரது அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.
ஆனால் 27.05.2002ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர், 2003ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்பட்ட அரசாணைகளின்படி டாடா நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்திலும் 80 சதுர கிமீ அளவிற்கு தொழிற்சாலை நிறுவுவதற்கு ஆய்வு கொள்வதற்கென பிராஸ்பெக்டிங் லைசென்ஸ் கொடுக்கப்பட்டு, டாடா நிறுவனமும் ஆய்வை முடித்து விட்டது.
2005ம் ஆண்டு பிப்ரவரி 18ம் நாளன்று 59.9 ச.கிமீ அளவிற்கு சுரங்கப் பணிகளைத் தொடங்குவதற்காக உரிமம் கோரி விண்ணப்பம் செய்துள்ளார்கள். விரைவாக இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திட்டப் பகுதியை சாத்தான்குளம், குட்டம் என இரண்டு பகுதிகள் பிரித்துக் கொள்ளப்பட்டன. இவ்வளவு நடந்த பின்பு அப்படியே திட்டத்தை விட்டு விட்டதாக தற்போது கதை அளந்திருக்கிறார்.
ஜெயா டிவி வைகுண்டராஜன்:
வைகுண்டத்தை வாரி வாரி சம்பாதித்துக் கொள்ள முதல்வராக இருந்த ஜெயலலிதா வழி வகுத்து கொடுத்தாரே தவிர வறண்ட பகுதி மக்களுக்கு வாழ்வளிக்க அவரது வஞ்சக எண்ணம் இடம் கொடுக்கவில்லை.
அது மட்டுமா ஜெயலலிதா கொடுத்துள்ள அறிக்கையில் கடந்த 2005ம் ஆண்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக கோப்பு அவருக்கு அனுப்பப்பட்டதாகவும், அதிலே அவர் கையெழுத்திடாமல் கோப்பினை திருப்பி அனுப்பி விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.
இதாவது உண்மையா, கிடையாது. ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான கோப்பு தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனால் கடந்த 19.07.2005 அன்று கையெழுத்திடப்பட்டு முதல்வர் அலுவலகத்திற்கு 20.07.2005 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூட்டத்தில் வைகுண்டம்!!!!:
அந்த கோப்பிலே கையெழுத்திடாமல் ஜெயலலிதா திருப்பி அனுப்பிவிட்டதாக தன்னுடைய அறிக்கையிலே இப்போது கூறுகிறார். ஆனால் 11.05.2006 வரை முதல்வராக ஜெயலலிதாக இருந்தவரை அந்த கோப்பு அவரது அலுவலகத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சி தோல்வியுற்ற பிறகு தொழில் துறைக்கு அந்த கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
எனவே கோப்பில் அவர் கையெழுத்திடாமல் துறைக்கு அனுப்பிவிட்டதாக கூறி இருப்பதும் மற்றொரு பொய்தான்.
2005ம் ஆண்டு மாவட்ட கலெக்டர்கள் கருத்து தெரிவித்த பிறகு அந்த திட்டத்தைப் புதுப்பிக்க விரும்பாமல் கோப்பில் கையெழுத்திட முன்வரவில்லை என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன் 22.11.2005 அன்று டைட்டானியம் தொழிற்சாலையை நிறுவுவது குறித்து கூட்டம் ஒன்றையே நடத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தில் டாடா நிறுவனத்தினரும் தொழில் துறை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
அது மாத்திரமல்ல, மற்றொரு முக்கியமான நபரும் அரசு சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்திலே கலந்து கொண்டுள்ளார். நான் கூறவில்லை, பைலிலேயே அந்த விபரம் உள்ளது. யார் தெரியுமா அவர், கார்னட் என்ற கனிம பொருளை அந்த பகுதியில் அளவுமீறி சட்ட விரோதமாகவும், தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு பணம் குவிப்பவரும், குற்றங்கள் பல புரிந்து இப்போது பல வழக்குகளில் காவல் துறையினரால் தேடப்பட்டு வருபவருமான சாட்சாத வி.வி.மினரல்ஸ் உரிமையாளருமான வைகுண்டராஜன் தான் அந்த கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கிறார்.
அரசு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் வைகுண்டவர் எப்படி கலந்து கொண்டார்?. அவருக்கு என்ன அதிகாரம்?. அம்மையாரின் ஜெயா டிவியின் பங்குதாரர் என்ற முறையில் கலந்து கொண்டாரா?.
அவருடைய லாரிகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மறித்தார்கள் என்றவுடன் அலறி அடித்துக்கொண்டு ஜெயலலிதா அறிக்கை விடுத்தாரே, அந்த உரிமையோடு அவர் இந்த கூட்டத்திலே கலந்து கொண்டாரா அவர் எதற்காக கலந்து கொண்டார் அதையும் சொல்கிறேன். கேளுங்கள்.
வைகுண்டராஜனுக்கு 1,000 ஏக்கர்:
டைட்டானியம் தொழிற்சாலைக்காக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ள இடத்திலே தனக்கு அக்கறை உள்ளது என்றும், அந்த இடத்தில் ஆயிரம் ஏக்கரில், அவர் தொழில் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார் வைகுண்டம்.
அந்த கோரிக்கை உடனடியாக அந்த கூட்டத்தில் ஏற்கப்பட்டு டாடா தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை வைகுண்டராஜனுக்கு சுரங்கம் நடத்திக்கொள்ள தாரை வார்க்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இப்போது புரிகிறதா கதை எங்கேயோ போகிறது என்று?. கட்டு சோறு மூட்டையில் எலியை வைத்தது ஏன்? ஜெயலலிதா எதற்காக இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்?. இதுவரை எந்தப் பிரச்சினையிலும் இல்லாத அளவிற்கு அவரே தலைமையேற்று போராட்டம் நடத்தப் போகிறேன் என்று முன் வந்ததற்கு என்ன காரணம் என்பது இப்போது புரிகிறதா இல்லையா?
நாட்டின் பாதுகாப்பு துறைக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் ஒரு தாதாவுக்காக தமிழ்நாட்டு செல்வத்தை கொள்ளை போக விடுவதா. இது தான் நாட்டு பற்றோ?
எப்படியோ, அம்மையார் தயவில் அந்தப்பகுதியில் கொடி நாட்டி, இன்று டைட்டானியத்திலும், கார்னட்டிலும் கொள்ளையடிக்கும் தாதாவுக்கு, துணை போகும் காரியத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தாசானுதாசர்கள் தழைத்து வாழட்டும். அந்த பகுதி மக்கள் ஏமாறுவதற்காகவே பிறந்தவர்கள் என்கிறபோது ஏமாற்றுகின்றவர்கள் ஏகபோகமாக வாழத்தான் செய்வார்கள்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications