வைகுண்டம்: ஜெ. வழக்கை எதிர்கொள்ள தயார்-கருணாநிதி
சென்னை:டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துக்களுக்காக ஜெயலலிதா என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார். இது தொடர்பாக அழிக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் ஏராளமாக உள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை
கேள்வி: டைட்டானியம் தொழிற்சாலை பற்றிய விவகாரத்தில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் உள்ள முரண்பாடுகளையும், அவர் மறைத்துள்ள உண்மைகளையும் நீங்கள் அறிக்கை மூலம் வெளியிட்டதைக் கண்டித்து ஜெயலலிதா உங்கள் மீது சிவில், கிரிமினல் வழக்கு போடப் போவதாக எச்சரித்திருக்கிறாரே
பதில்: புற்றில் வாழ் அரவுக்கு அஞ்சோம், பொய்யர் தம் பூச்சாண்டிக்கஞ்சோம் என்ற பாடல் வரிகளைத்தான் நினைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. என் மீது வழக்கு போடும் அளவுக்கு நான் ஒன்றும் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வெளியிடவில்லையே.
தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் தொழிற்சாலை பற்றி நான் அளித்த விளக்கத்தில் ஏற்கனவே 2002ம் ஆண்டிலேயே டாடாவுடன் ஜெயலலிதா ஒப்பந்தம் செய்து கொண்ட கதையையும், அந்தத் தொழில் பற்றி அதிகாரிகளும், டாடா நிறுவனத்தினரும் கலந்து கொண்டு கூட்டத்தில் கனிமக் கொள்ளை முதலாளி வைகுண்டராஜனும் கலந்து கொண்டார் என்பதையும் தேதியோடு வெளியிட்டிருந்தேன்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பைலில் காணப்பட்ட பல விஷயங்களை அம்பலப்படுத்தியிருந்தேன். அந்தக் கோபத்தில்தான் ஜெயலலிதா என் மீது சிவில், கிரிமினல் வழக்குகள் போடுவதாக எச்சரித்திருக்கிறார். அதிமுக அரசின் அந்நாளைய கோப்புகளை ஆதாரமாகக் கொண்டும், சட்டப் பேரவையிலே அவரது அமைச்சரவையிலே அப்போது இருந்த தொழில் அமைச்சர் பேசியவற்றையும் அடிப்படையாக வைத்தும் அந்த அறிக்கையை நான் வெளியிட்டிருந்தேன்.
ஜெயலலிதா என்மீது வழக்கு போட்டால் அதை எதிர்கொள்வதற்கு அவர்கள் ஆட்சிக் காலத்திலே உள்ள அழிக்க முடியாத சான்றுகள் எவ்வளவு இருக்கின்றது.
இதோ அவருடைய அரசின் தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கடந்த 29.07.2004ல் டைட்டானியம் தொழிற்சாலை பற்றி தமிழக சட்டப்பேரவையில் பேசியதை ஒரு முறை படித்துப் பார்த்தாலே அவர் என்மீது போட நினைக்கும் வழக்கு சுக்கல் சுக்கலாக நொறுங்கி போய்விடும் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாது போலும்.
தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன்: ஏற்கனவே ஜெயலலிதாவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னாலே டைட்டானியம் டை ஆக்ஸைடு என்ற மிகப்பெரிய தொழிற்சாலையை அங்கே நிறுவுவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டு இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் கிட்டத்திட்ட 3,000 பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு தருகின்ற நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. நானும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற உணர்வில் இதை நான் கண்டிப்பாகச் செய்வதற்கு முயற்சியை மேற்கொள்வேன்.
இது மட்டுமல்ல இதே அமைச்சர் 31.03.2005 அன்று சட்டப் பேரவையில் கூறும்போது,
டைட்டானியம் தொழிற்சாலை 3,000 கோடி ரூபாய் செலவில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரவுள்ளது. 3,000 கோடி ரூபாய் முதலீடு என்பது மிகப்பெரிய ஒரு முதலீடு. இந்தக் காலக்கட்டத்தில் இந்த ஆண்டு, இந்த ஓராண்டு காலத்தில் ரூ.750 கோடியை அங்கே முதலீடு செய்வதற்கு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியின் தொழில் துறை அமைச்சரால் பேரவையிலேயே இவ்வாறு கூறப்பட்ட திட்டத்தைத் தான், ஜெயலலிதா மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கருத்தைக் கேட்டு கிடப்பிலே போட்டு விட்டதாக தெரிவிக்கிறார். இதைச் சொன்னால் என்மீது வழக்கு தொடர்ப் போகிறேன் என்கிறார். வழக்கு வரட்டும், சட்டப்பேரவையில் பேசப்பட்ட பேச்சுக்களும், அரசு கோப்புகளும் நீதிமன்றத்திலே உண்மைகளைத் தெளிவாக்கும்.
கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் சுயநலத்திற்காக தங்களைச் சந்திக்கவில்லை என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே
பதில்: டைட்டானியம் தொழிற்சாலை குறித்து அரசு தற்போது செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், டாடா நிறுவனத்திற்கு அரசு நிலத்தைக் கையகப்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்காவிட்டால் ரூ.200 கோடி நஷ்டஈட்டை அரசு தர வேண்டும் என்று எழுதப்பட்டிருப்பதாக அருமை தோழர் தா.பாண்டியன் பேசி அது அவர்களுடைய கட்சி ஏட்டிலேயே வந்துள்ளது.
அதற்கு விளக்கம் அளித்து, உண்மை நிலையை தெளிவாக்குவதற்காகத்தான், தோழமைக் கட்சியைச் சேர்ந்த தோழர் தா.பாண்டியன் இவ்வாறு பேசியிருக்கிறார்.
என்னைச் சந்திக்கும் தோழர் பாண்டியன் இது போன்ற பிரிவு ஒப்பந்தத்திலே உள்ளதா? என்று என்னிடம் கேட்டு பேசியிருக்கலாம் என்று நான் எழுதியிருந்தேன். வேறு எது எதற்காகவோ என்னை அடிக்கடி சந்திக்கும் என்று நான் கூறியதை தான் சுயநலத்திற்காக தான் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். நான் எனது எழுத்தில் அவர் சுய நலத்திற்காக அடிக்கடி என்னை சந்திக்கிறார் என்று கூறவில்லை.
பொதுவுடமை கட்சியின் மாநில செயலாளராக அவர் எத்தனையோ பொது பிரச்சனைகளுக்காக என்னை சந்திப்பதை தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.
கேள்வி: அரசாங்கப் பணத்தில், பொது மக்கள் வரிப் பணத்தில் கருணாநிதி எப்போதும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டதாக ஜெயலலிதா அறிக்கையிலே தெரிவித்திருக்கிறாரே
பதில்: அவரது ஆட்சிக்காலத்தில் அவரது சாதனைகளை பற்றி விளம்பரம் செய்து கொள்ள அமெரிக்காவிலே நடைபெறும் வால் ஸ்ட்ரீட் என்ற பத்திரிக்கைக்கு மூன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு மூன்று பக்கத்தில் விளம்பரம் செய்து கொண்டு, நான் அதை இங்கே பொதுக் கூட்டத்திலேயே எடுத்து காட்டினேன்.
அப்போது அதற்கு எந்த விதமான பதிலும் கூறாத ஜெயலலிதா தான் இப்போது அரசாங்கப் பணத்தில் தன்னை எப்போதும் விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை என்று புரளுகிறார்.
கேள்வி: பொது நல நோக்கோடும், பொதுமக்களின் நல்வாழ்கிற்காகவும், அரசு செய்ய முன் வருகின்ற திட்டங்கள், அரசியல் உள் நோக்கத்தோடு சிலர் செயல்படுவதின் காரணமாக தாமதப்படலாமா
பதில்: பொதுமக்கள் உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். நான் அண்மையிலே ஒரு விழாவிலே பேசும் பேது குறிப்பிட்டதைப் போல நல்லது செய்யவிரும்பும் போது இப்படிப்பட்ட தடங்கல்கள், இடையூறுகள் காரணமாக சில நல்ல காரியங்களை உரிய காலத்தில் செய்ய முடியாமல் போகிறது.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications