யார் இந்த வெள்ளை ரவி?- பிளாஷ் பேக்
சென்னை:ஓசூர் அருகே போலீசாரால் என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரெளடி வெள்ளை ரவிக்கு ரூ.30 கோடிக்கு மேல் சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
வெள்ளை ரவியின் பெற்றோர் பர்மாவைச் சேர்ந்தவர்கள். சென்னையில் குடியேறிவிட்டனர். அவர்கள் வியாசர்பாடி பி.வி.காலனி 27வது தெருவில் வசித்தனர். வெள்ளை ரவி தவிர இவர்களுக்கு வாசுகி என்ற சகோதரியும் உள்ளார்.
எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாத ரவிக்கு சிறு வயதிலேயே அடிதடி ரொம்ப பிடிக்குமாம். 1990ல் வட சென்னையில் ரெளடியாக இருந்த பெஞ்சமின் என்பவனின் கூட்டத்தில் சேர்ந்தான்.
![]() |
வட சென்னை பகுதியில் மற்றொரு ரெளடி கும்பலின் தலைவனான சேராவுக்கும், பெஞ்சமினுக்கும் கடைகளில் மாமூல் வாங்குவதில் தகராறு ஏற்பட்டது. இதில் சேராவின் கூட்டாளி பாலு படுகொலை செய்யப்பட்டான்.
இதற்கு பதிலடியாக 1991ல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சேராவின் சித்தப்பா சுப்பையாவை, பெஞ்சமின் கூட்டத்தில் இருந்த வெள்ளை ரவி, பலர் முன்னிலையில் பட்டப் பகலில் வெட்டிக் கொன்றான். இந்தக் கொலைக்கு பிறகு மிகவும் பிரபலமானான் வெள்ளை ரவி.
தனது சித்தப்பாவை கொன்றதற்கு பழிக்குப் பழியாக சேரா கோஷ்டி பெஞ்சமினை வெட்டிக் கொன்றது. அதன்பின்பு பெஞ்சமின் கூட்டத்திற்கு வெள்ளை ரவியே தலைவன் ஆகிவிட்டான்.
இந் நிலையில் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் பகுதி காங்கிரஸ் பிரமுகர் மகள் லட்சுமியை காதலித்தான் வெள்ளை ரவி. இந்த காதலை லட்சுமி ஏற்கவில்லை.
இதற்கிடையே வெள்ளை ரவியைக் காலி செய்ய கபிலன், ஆசைத்தம்பி ஆகியோரை நியமித்தான் சேரா. ஆனால், அவர்களால் வெள்ளை ரவியை அண்டவே முடியவில்லை.
இந் நிலையில் தான் சேராவின் கூட்டாளிகளான கபிலன், ஆசைத்தம்பி, மனோ, கோபால் ஆகியோரை போலீசார் என்கெளண்டரில் சுட்டுக் கொன்றனர்.
தனது முக்கியமான அடியாட்களை மொத்தமாக போலீஸ் துப்பாக்கிக்கு பலி கொடுத்துவிட்ட சேரா பலமிழந்தான். இதனால் வெள்ளை ரவியின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது.
இதையடுத்து சேரா பணிந்து போக ஆரம்பித்தார். வெள்ளை ரவிக்கு வெள்ளைக் கொடி காட்டினான்.
இந் நிலையில் திடீரென சேராவும், வெள்ளை ரவியும் தாங்கள் திருந்தி வாழப் போவதாக போலீசாருக்கு தூது அனுப்பினர். இருவரும் சேர்ந்தே கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து திருந்தி வாழப் போவதாக மனு கொடுத்து விட்டு, இருவரும் சேர்ந்தே பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியும் கொடுத்தர்.
ஆனால், இந்த இருவரையும் போலீசார் நம்பவில்லை. என்கெளண்டருக்கு பயந்தே இவர்கள் நாடகமாடுவதாக அதிகாரிகள் கருதினர்.
இந் நிலையில் சேரா மதுரை பக்கமாக ஓடிப்போய் பதுங்கினான். ரவியும் ஆந்திரா, கர்நாடகா என வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு தனது ஆட்களை இயக்கி வந்தான்.
இதனால் அவனது ஆட்கள் சென்னையில் தொழிலதிபர்களையும், வட்டித் தொழில் செய்பவர்களையும், கேபிள் டிவி தொழில் நடத்துபவர்களையும் கடத்தி பணம் பறித்து வந்தனர்.
கடந்த 1997ம் ஆண்டு சென்னை மத்திய சிறைச் சாலையில் பெரும் கலவரம் நடந்தது. ஜெயிலர் ஜெயக்குமாரை கைதிகள் எரித்துக் கொன்றனர். அதில் ரவிக்கும் முக்கிய பங்குண்டு.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல கைதிகள் கொல்லப்பட்டனர். ரவி கழிவறைக்குள் போய் ஒழிந்து கொண்டு உயிர் தப்பிவிட்டான்.
இவன் செய்யும் அட்டூழியங்களுக்கு இன்னொரு பிரபல ரெளடியான பங்க் குமார் துணையாக நின்றுள்ளான். பாமகவைச் சேர்ந்த குமார் தென் சென்னையை கலக்கி வந்த இன்னொரு ரெளடி ஆவான்.
வெள்ளை ரவியின் சட்ட விரோத செயல்களுக்கு ஆட்களை சப்ளை செய்து வந்தான் பங்க். இவனையும் சமீபத்தில் தான் போலீசார் இவனையும் என்கெளண்டரில் சுட்டுக் கொன்றனர்.
வெள்ளை ரவிக்கும், அயோத்திக் குப்பம் தாதா வீரமணிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. தன்னை போலீஸ் நெருங்கிால் வீரமணியிடம் தான் தஞ்சமடைவானாம் ரவி.
அவன் ரவியை தனது பெரிய மீன்பிடி படகில் நடுக் கடலுக்குள் கொண்டு சென்று விடுவானாம். அங்கேயே வாரக்கணக்கில் தண்ணியும், பெண்களும், விருந்துமாக பொழுது கழியும்.
மேலும் இந்த இருவரும் பல நடிகைகளையும் மிரட்டி தூக்கிச்சென்று நடுக்கடலில் படகில் வைத்து உல்லாசமாக இருந்துள்னர். ஆனால், இவர்களால் பாதிக்கப்பட்ட எந்த நடிகையும் புகார் கொடுத்ததில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் வெள்ளை ரவி போதை மருந்து கடத்தல், கொலை, கொள்ளை, தொழிலதிபர்களை கடத்தி, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய செயல்கள் மூலம் ரூ.30 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இந்தப் பணத்தை பெங்களூரிலும், ஆந்திராவிலும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளான்.













Click it and Unblock the Notifications