சென்னையில் சிறுவன் கடத்தல்: 8 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்- டிரைவர் கைது
சென்னை:சென்னையில் 6 வயது சிறுவன் கடத்தப்பட்டான். அவனை கூடுதல் கமிஷ்னர் ஜாங்கிட் தலைமையிலான தனிப் படை போலீஸார் 8 மணி நேரத்தில் மீட்டனர்.
வேளச்சேரியைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் சாதிக். இவர் ஹார்டுவேர் கடையும் நடத்தி வருகிறார்.
இவரது மகன் ரிஷாத். 6 வயதான இச் சிறுவன் சூளைமேட்டில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வருகிறான்.
நேற்று மாலை பள்ளியில் இருந்து திரும்பிய ரிஷாத் வீட்டுக்கு அருகே டியூசன் கிளாசுக்குச் சென்றான். ஆனால், இரவு 8 மணி வரை வீடு திரும்பவில்லை.
அவனை பெற்றோர் தேட ஆரம்பித்த நிலையில் இரவு 8.30 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசியவன், ரிஷாத்தை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ. 4 லட்சம் தந்துவிட்டு அவனை மீட்டுச் செல்லுமாறும், போலீசுக்குப் போனால் பையன் கொலையாவான் என்றும் மிரட்டினான்.
பணத்தை எங்கே வந்து தர வேண்டும் என்ற விவரங்களை பின்னர் சொல்வதாகக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.
இதையடுத்து போலீசுக்கு தகவல் தந்தார் சாதிக். இதைத் தொடர்ந்து கமிஷ்னர் நாஞ்சில் குமரனின் நேரடி கண்காணிப்பில் கூடுதல் கமிஷ்னர் ஜாங்கிட் தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது.
சாதிக்கின் வீட்டில் காலர் ஐடியை மாட்டிய போலீசார் காத்திருந்தனர். இந் நிலையில் இரவு 11 மணிக்கு மீண்டும் கடத்தல்காரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
ரூ. 4 லட்சம் பணத்துடன் பள்ளிக்கரணை ரோட்டுக்கு வா, நான் அங்கு நிற்பேன். பணத்தை 10 அடி தூரத்தில் வைத்து விட்டுப் போ. பணம் என் கைக்கு வந்தவுடன் உன் மகனை கோயம்பேடு பஸ் நிலையத்தில் விட்டுவிடுவோம். அவனை நீ அழைத்துச் செல்லலாம் என்றான்.
இதையடுத்து பணத்துடன் மோட்டார் சைக்கிளில் சாதிக்கையும் அவரது உறவினரையும் பள்ளிக்கரணை சாலைக்கு போலீஸ் அனுப்பினர்.
பின்னால் ஒரு டாக்ஸியில் சாதாரண உடையில் போலீசார் சென்றனர். அவன் சொன்ன இடத்தில் இன்னொரு போலீஸ் படை சென்று மறைந்து நின்றது.
இந் நிலையில் சாதிக்குடன் சென்ற உறவினரின் செல்போனை தொடர்பு கொண்ட கடத்தல்காரன், உன்னை யார் சாதிக்குடன் வரச் சொன்னது. நீ போய்விடு. சாதிக்கை மட்டும் பல்லாவரம் விமான நிலைய காம்பவுண்ட் பக்கம் வரச் சொல் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
இதன் மூலம் கடத்தல்காரன் சாதிக்கின் குடும்பத்துக்கு நன்றாக அறிமுகமானவன் என்பதை போலீசார் உணர்ந்தனர்.
இந் நிலையில் அதிகாலை 4 மணிக்கு பணத்துடன் சாதிக்கை பல்லாவரத்துக்கு அனுப்பிய போலீசார் ஏற்கனவே அங்கு மறைந்திருந்து கண்காணிக்க ஆரம்பித்தனர்.
மேலும் சாதிக்கையும் சாதாரண காரில் தூரத்தில் பின் தொடர்ந்தனர். சொன்ன இடத்தில் அந்த ஆசாமி முகத்தை துணியால் மூடியபடி மோட்டார் சைக்கிளில் காத்திருந்தான்.
சாதிக் அவனை நெருங்கிய நிலையில் போலீசார் தங்களது காரால் அவனது பைக்கை மோதினர். இதில் நிலை குலைந்தவனை போலீசார் பிடித்தனர்.
அவன் சாதிக்கின் கடையில் வேலை பார்த்து வரும் முருகன் ஆவான். அவன் கொடுத்த தகவலின்பேரில் பள்ளிக்கரணையில் ஒரு வீட்டிலிருந்து சிறுவன் ரிஷாத்தை போலீசார் மீட்டனர்.
முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் போலீசார் எடுத்துள்ளனர். அவனுக்கு காவல் நிலையத்தில் வைத்து சிறப்பு கவனிப்பு நடந்து வருகிறது.
முருகன் சிறு வயதிலிருந்தே சாதிக்கின் கடையில் வேலை பார்த்து வந்தவன். சாதிக்கின் வீட்டிலேயே வளர்ந்த அவனுக்கு திருமணம் செய்து வைக்கவும் அவர் திட்டமிட்டிருந்தாராம். சாதிக்கின் காரையும் ஓட்டி வந்துள்ளான்.
இந் நிலையில் தான் அவரது மகனையே கடத்தி பணம் சம்பாதிக்க திட்டமிட்டு மாட்டியுள்ளான்.
கடத்தப்பட்ட சிறுவனை 8 மணி நேரத்தில் மீட்ட ஜாங்கிட் தலைமையிலான தனிப் படையினருக்கு கமிஷ்னர் நாஞ்சில் குமரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications