வைகுண்டராஜன் சரணடைய உத்தரவு:2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!
மதுரை:அனுமதியில்லாமல் தாது மணலை அள்ளியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் தொழிலதிபர் வைகுண்டராஜனை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன். வி.வி. மினரல்ஸ் என்ற பெயரில் தாதுக்கள் அடங்கிய மணலை எடுத்து, தாதுவைப் பிரித்து வெளிநாடுளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். ஜெயா டிவியின் முக்கியமான பங்குதாரரும் கூட.
மணலை எடுப்பதில் கணக்கு காட்டுவதில் குளறுபடி செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இதனால் இவர் மீது மணல் கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவரது நிறுவனங்களில் சமீபத்தில் ரெய்டுகள் நடந்தன. இந்த நிலையில், குமரி மாவட்டம் கருங்கல் கடல் பகுதியில் பெண்களை குளிக்க விடாமல் தடுத்ததாகவும், அனுமதியின்றி கடற்கரையிலிருந்து மணல் எடுத்ததாகவும், கூடங்குளத்தில் மண் எடுத்ததைத் தட்டிக் கேட்ட சுவாமி தாஸ் என்பவரை அடித்ததாகவும் கூறி வைகுண்டராஜன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லை, குமரி என இரு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் இவை அனைத்தும் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மனு தாக்கல் செய்தார் வைகுண்டராஜன்.
மேலும் தனது கணவர் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. எனவே இதை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வைகுண்டராஜனின் மனைவி சந்திரபூபதி மனு தாக்கல் செய்தார். காவல்துறை தரப்பில், வைகுண்டராஜனுக்கு ஏற்கனவே வேறு வழக்கில் அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அத்தனை மனுக்களும் நேற்று நீதிபதி ராஜசூர்யா முன்பு விசாரணைக்கு வந்தது. வைகுண்டராஜன் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீஸார் விசாரிக்கலாம். அதன் பின்னர் 2 நாட்கள் கழித்து வைகுண்டராஜன் ஜாமீனில் வெளியே வரலாம்.
விசாரணை நடத்தும்போது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு நெறிமுறைகளை போலீஸார் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
முன்ஜாமீன் நிபந்தனையை வைகுண்டராஜன் சரியாக பின்பற்றவில்லை. எனவே அவருக்கு ரூ. 2000 அபராதம் விதிக்க்படுகிறது. சமரச தீர்வு மையத்துக்கு இந்தப் பணத்தை அவர் வழங்க வேண்டும்.
வள்ளியூர் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி வைகுண்டராஜன் கையெழுத்திட வேண்டும்.
சுவாமிதாஸ் என்பவரை மிரட்டியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், சம்பந்தப்பட்ட சுவாமிதாஸே நேரில் ஆஜராகி தான் அப்படி ஒரு புகாரே கொடுக்கவில்லை என்று கூறி விட்டார்.
தான் வெற்றுத் தாளில் கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்ததாக சுவாமிதாஸ் கூறியுள்ளார். அந்த தாளில் எழுதியது யார் என்பதை போலீஸார் விசாரித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் வைகுண்டராஜனுக்கு முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. வைகுண்டராஜன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரிக்கத் தேவையில்லை என்றார் நீதிபதி ராஜசூர்யா.












Click it and Unblock the Notifications