கருணாநிதி இஸ்லாமியர்களின் விரோதி-ஜெயலலிதா
சென்னை:ஜமாத் அமைப்புகளிலும், தர்ஹா நிர்வாகத்திலும் வக்பு வாரியத்தைத் தலையிடச் செய்து குழப்பங்களை ஏற்படுத்த திமுக அரசு முயன்று வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர்களது ஜமாத் அமைப்புகளிலும், தர்ஹா நிர்வாகத்திலும் வக்பு வாரியத்தைத் தலையிடச் செய்து குழப்பங்களை ஏற்படுத்த திமுக அரசு தூண்டி வருகிறது.
இதனால் இஸ்லாமிய பெருமக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கருணாநிதி இழந்து வருகிறார்.
வக்பு வாிய நிர்வாகிகள் உள்பட அதிகாரிகள் சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள புனித மகான்களின் கபர்ஸ்தான்களை உடைத்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
இந்தச் செயல் இஸ்லாமிய மதத்தின் புனிதத்தன்மையை பாழ்படுத்துவதோடு மத நம்பிக்கைக்கு ஊறு விளைவித்து இறை கோட்பாட்டுத் தத்துவத்தையே சேதாரப்படுத்தும் முயற்சியாகும்.
கடந்த 9ம் தேதி திமுகவின் தோழமைக் கட்சியாக செயல்படும் எம்பி காதர் மைதீனின் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வாணியம்பாடி எம்எல்ஏ அப்துல் பாஷித் தலைமையில் திமுக அரசின் பாசிச நடவடிக்கைகளை கண்டித்தும், வக்பு வாரிய நிர்வாகத்தைக் கண்டித்தும், மதரீதியிலான தவறான அணுகுமுறைகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்களது கடும் ஆட்சேபத்தை தெரிவிக்கும் விதத்தில் திரண்டு நின்று கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
இஸ்லாமிய நெறிமுறைகளின்படி இம்மையிலும் மறுமையிலும் உன்னதமான ஒன்றாக சுட்டிக்காட்டப்படுவது சொர்க்கம். பெருமானார் நபிகளின் வாக்கின்படி, தாயின் காலடியில் தன் சொர்க்கம் இருக்கிறது என்பதாகும்.
உயரிய நெறிமுறைகள் என்பது சமூகத்தில் ஒருவரின் வாழ்நிலை சார்ந்து மரியாதை வழங்க வேண்டும். அதை மறுப்பதற்கோ மத உரிமைகளை பறிப்பதற்கோ கண்ணியமிக்க கடைமைகளை தட்டிப் பறிப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை.
இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசு தொடர்ந்து துவேசத்தில் ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கருணாநிதியின் அரசியல் சித்து விளையாட்டு என்பது தேர்தல் வந்துவிட்டால் இஸ்லாமிய பெருமக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பொய்யான பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து தனது கற்பனை சரக்கை காற்றில் பறக்கவிட்ட தேர்தல் வியாபாரத்தை கன ஜோராகா நடத்துவது தான்.
ரமலான் மாதத்தின் நோன்புக் கஞ்சி குடிப்பதோடு கருணாநிதிக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் உள்ள உறவு முடிந்து விடும் என்பதன் அடையாளமாகத் தான் புகழ் பெற்ற தர்ஹாக்களின் நிர்வாகத்திலும் தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.
எனது ஆட்சி காலத்தில் இஸ்லாமிய பெருமக்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு சிறந்த சமூகப் பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்கு வழி வகுத்தேன். புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பித்த அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் அந்தப் புனிதப் பயணத்தைத் தொடர மத்திய அரசிடம் போராடி சலுகையை பெற்றுத் தந்தேன்.
சுதந்திரம் பெற்ற பின் தமிழ்நாட்டில் முதன் முதலாக எனது ஆட்சியில் தான் வக்பு வாரியத்துக்கு கட்டடம் கட்டித் தரப்பட்டது. தற்போது அந்தக் கட்டடத்தைத் திறக்காமல் கிடப்பில் போட்டதன் மூலம் அக் கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எனது ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறார் கருணாநிதி.
இஸ்லாமிய மக்களின் நண்பராக நடித்துக் கொண்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொள்வதையே தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார் கருணாநிதி என்பதை அச் சமூக மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளுக்கு மாறாக நடக்கும் வக்பு வாரியத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து அந்த மக்களுக்கு விரோதமாக செயல்படத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications