மகள், மருமகனுடன் அமெரிக்காவுக்கே போய் விடுங்கள்-பிரதமருக்கு ஜெ. அட்வைஸ்
சென்னை:அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்திலேயே பொய்யான தகவலைக் கூறும் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் அத்தனை கட்சிகளும் சேர்ந்து அவருக்கு எதிராக போராட வேண்டி வரும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை
கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் இறு அவைகளிலும் மட்டுமல்லாது, நாடு முழுவதும் இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பெரிய அளவில் எழுச்சிகரமான நடவடிக்கைகள் நடந்து கொண்டுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலர் இதை ஏற்கவில்லை என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள பல கட்சிகளும் இதை எதிர்க்கின்றன என்றும் செய்திகள் வருகின்றன. மத்தியில் ஆட்சி நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பை இதுவரை தந்து கொண்டுள்ள இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு மாபெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
அதிமுகவைப் பொருத்தவரையில் நான் இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் வெளிவந்த நாள் முதலே கடுமையாகவும், முழுமையாகவும் எதிர்த்து வருகிறேன். அணு விஞ்ஞானிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள்.
இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக உள்ளவர்கள் யார் என்று பார்ப்போமேயானால், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைத் தவிர வேறு யாரும் ஆதரிப்பதாக தெரியவில்லை.
150 எம்.பிக்களை உள்ளடக்கிய காங்கிரஸ் கட்சி மட்டுமே இந்திய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆகி விட முடியாது. இந்தியாவை இப்படி ஒப்பந்தத்தில் தள்ளி விடுவதற்கு அவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை.
இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒப்பந்தத்தை செய்து விட்டு கொஞ்சம் கூட கவலை இல்லாமல், ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தே தீர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் விடாப்பிடியாக, வலுக்கட்டாயமாக இருந்து வருகிறார்.
அவர் ஏன் இவ்வாறு பிடிவாதமாக இருக்கிறார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் பல வகையான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த 13ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ராணுவம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தாது என்று பொய் சொன்னார். ஆனால் அவர் அப்படிச் சொன்ன 24 மணி நேரத்தில் அமெரிக்க தகவல் தொடர்பு அதிகாரி, மிகத் தெளிவாக ராணுவம் சம்பந்தப்பட்ட அணு சக்தி சோதனைகளை இந்தியா செய்ய முற்பட்டால் உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும், பின்விளைவுகளும் கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதேபோல அமெரிக்க நாட்டின் ஹைட் சட்டத்தைப் பற்றியோ, அமெரிக்க அணு சக்தி சட்டம் 123ன் கீழ் கொண்டு வரப்படும் இந்த ஒப்பந்தம் பற்றியோ ஒரு வார்த்தை கூட பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை.
ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கூடாது என்றும் அப்படி நடந்தால் ராஜினாமா செய்து விடுவேன் என்றும் மிரட்டும் பாணியில் பேசி வருகிறார் மன்மோகன் சிங்.
இந்த நிலையில் பிரதமரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியுள்ளனர் என்றும், அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்துள்ளது என்றும் இடி போல் செய்தி வந்து இறங்கியுள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது இந்திய நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை, இந்திய மக்களின் நம்பிக்கையை அவர் அறவே இழந்து விட்டார் என்பது தெளிவாகிறது.
சுதந்திர தின உரையின்போதும் கூட இந்த ஒப்பந்தம் குறித்து பேசவே இல்லை பிரதமர். விவசாயிகளுக்கு அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்ஜாலமாக பேசி விட்டுப் போயிருக்கிறார்.
ஆனால் இவரது ஆட்சிக்காலத்தில் இந்திய விவசாயிகள் கொஞ்சம் கூட முன்னேறவில்லை. இவரது ஆட்சிக்காலத்தில்தான் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டனர்.
இவர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்தபோதுதான் இந்தியப் பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இவர் நிதியமைச்சராக இருந்தபோதுதான் காட் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டு இந்திய விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர்.
இப்படிப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட பிரதமர் இனியும் நாட்டுக்குத் தேவைதானா என்ற கேள்விக்கு மிகப் பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.
பிரதமர் அவர்களே, நீங்கள் நாட்டை ஆண்டது போதும். உங்களால் இந்த நாடு சீரழிந்தது போதும். இந்திய இறையாண்மைக்கு விரோதமாக நீங்கள் செயல்பட்டது போதும். இதுவரை மக்களுக்கு விரோதமான பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீங்கள் வெண்சாமரம் வீசி வரவேற்றது போதும்.
உங்களது மகள், மருமகனுடன் நீங்களும் பேசாமல் அமெரிக்காவுக்கே போய் விடுங்கள். போகும்போது இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் அணு சக்தி ஒப்பந்தத்தையும் மூட்டை கட்டி கொண்டு போய் விடுங்கள். உடனடியாக பதவி விலகி விடுங்கள்.
நீங்கள் பதவியில் இருக்கிற ஒவ்வொரு நாளும் இந்தியாவின் சுதந்திரத் தன்மை, இந்தியாவின் இறையாண்மை மிகப் பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
நீங்களாக பதவி விலகி விடுங்கள். நீங்கள் விலக மறுத்தால் நாட்டுப்பற்றுள்ள அத்தனைக் கட்சிகளும் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications