For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேந்திர மோடியின் தோழி ஜெயலலிதா-தமுமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக் கொண்டு பொய்களைப் புனைந்து பேசி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான ஹைதர் அலி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஹைதர் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மதவாத பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து மக்கள் மன்றத்தில் அம்பலமாகிப் போன ஜெயலலிதா, இப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல அறிக்கை வெளியிட்டு, அதிலும் வழக்கம் போலவே பொய்களைப் புனைந்துள்ளார்.

முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு எதிராக வக்ஃபு வாரியத்தை திமுக அரசு தூண்டிவிடுவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் பற்றியும், முஸ்லிம்களின் உணர்வுகள் பற்றியும் ஜெயலலிதா பேசியிருப்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையாகத் தெரிகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் திமுக இழந்து வருவதாகவும், ஜமாஅத் நிர்வாகங்களில் வக்ஃப் வாரியத்தைத் தலையிடச் செய்து முஸ்லிம்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக திமுக அரசு இழந்து விட்டதாகவும், நரேந்திர மோடியின் அரசியல் தோழி குற்றம் சாட்டியுள்ளார்.

அறிவார்ந்த விமர்சனத்திற்கும், ஜெயலலிதாவிற்கும் அறவே சம்பந்தம் இருக்காது என்பதை அவரது இந்த அறிக்கை அறுதியிட்டு உறுதி செய்துள்ளது.

பாபர் பள்ளிவாசலை இடிக்க தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை அனுப்பிய ஜெயலலிதா, வக்ஃப் வாரிய நிர்வாகிகள் சென்னை வியாசர்பாடியில் உள்ள கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள புனித மகான்களின் நினைவிடங்களை உடைத்துத் தரைமட்டமாக்கியுள்ளதாக உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா குறிப்பிடுவது போல எந்த ஒரு சம்பவமும் நடக்கவே இல்லை. வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்கள் தமிழகமெங்கும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், கன்னிகாபுரத்தில் உள்ள வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான பி. ஹைதர் அடக்கஸ்தலத்தை வியாசர்பாடி சுற்றுவட்டாரத்தில் 12 ஜமாத்துகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த பொது அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிலர் அத்துமீறி நுழைந்து கட்டடம் எழுப்ப முனைந்துள்ளனர். அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்கள் மீது வக்ஃபு வாரிய ஆய்வாளர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதான் உண்மை.

ஜெயலலிதா, கனவுக் காட்சிகளிலும் கற்பனைக் காட்சிகளிலும் நடித்தவர். அந்த முன் அனுபவம் இப்போது அவருக்கு கைகொடுக்கிறது போலும்.

இறையில்லமான பாபர் பள்ளிவாசலை இடிக்க ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா என்பதும், 1992ம் ஆண்டில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பாபர் பள்ளிவாசலை இடிக்கும் கரசேவையை ஆதரித்த ஒரே முதலமைச்சர் இவர்தான் என்பதும் நாடறிந்த உண்மை.

மதத்தின் புனிதத்தன்மையை பாழ்படுத்துவது பற்றி ஜெயலலிதா பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது.

இஸ்லாமிய இறைக் கோட்பாட்டுத் தத்துவம் பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். திரைக்கோட்பாடு, தில்லானா நாடகங்கள் பற்றித் தெரிந்த அவருக்கு இஸ்லாமின் இறைக் கோட்பாடு பற்றி என்ன தெரியும்? இஸ்லாம் இறைக்கோட்பாட்டை அவர் படித்திருந்தால் முதலில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருக்கவே மாட்டார்.

வாக்குறுதிகளைப் பற்றி ஜெயலலிதா வாய்க்கூசாமல் பேசுகிறார். 1999ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்...

நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அதைத் தவறு என்று ஒத்துக்கொள்ளும் துணிவு எனக்குண்டு. பாஜகவுடன் நான் தேர்தல் உறவு வைத்ததுதான் வாழ்வில் நான் செய்த பெரும் தவறு. எதிர்காலத்தில் ஒருபோதும் பாஜகவுடன் உறவு வைத்துக் கொள்ளவே மாட்டேன் என்று மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, அதன்பிறகு பாஜகவுடன் எப்படியெல்லாம் உறவாடினார் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.

குஜராத்தில் 2002ல் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் நரேந்திர மோடியின் ஆசியுடனேயே நடைபெற்றது என்று சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த குஜராத் உள்துறைச் செயலாளர் கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்து, லட்சக்கணக்கான முஸ்லிம்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கிய மாபாதக நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தனி விமானத்தில் பறந்து சென்று, பூச்செண்டு கொடுத்து வாழ்த்தியவர், முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்துப் பேசுவது வேதனையான வேடிக்கைதான்.

2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்காலம் முடியும்வரை முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார்.

ஆந்திர முதல்வர் டாக்டர் ராஜசேகர ரெட்டி, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதைக் கடுமையாக கண்டனம் செய்து, எனது தலைமையில் முஸ்லிம்கள் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஆளானவர் ஜெயலலிதா.

வக்ஃப் வாரியத்திற்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் தனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகவும், இதன் காரணமாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இதைத் திறக்காமல் உள்ளதாகவும், இக்கட்டிடம் தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதுவும் முழுக்க முழுக்க பொய்யானதாகும். 2001ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டையிலிருந்து வக்ஃபு வாரிய புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2001ல் புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டாலும், அரசின் நிர்வாக அனுமதி கிடைக்கவில்லை.

வக்ஃபு வாரியத்தின் நீண்ட போராட்டத்திற்குப் பின் அரசின் நிர்வாக அனுமதி 2004ம் ஆண்டில் மட்டுமே கிடைத்தது. இது ஜெயலலிதா ஆட்சியின் அவலத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்டிடப் பணிகள் 30.1.2005ல் தான் தொடங்கப்பட்டது. மேலும் கட்டிடப் பணிக்கு அரசு மானியமாக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த ஜெயலலிதா, 2001லி2002ஆம் ஆண்டில் ரூ.24 லட்சம் மட்டும் ஒதுக்கினார். பிறகு மீதி தொகையை 2005- 2006ஆம் ஆண்டில்தான் ஒதுக்கினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டாலும், ஜெயலலிதா ஆட்சியில் கட்டுமானப் பணியை கான்ட்ராக்ட் எடுத்துக்கொண்டவர்கள் செய்த குளறுபடிகள் கட்டட திறப்பை தாமதப்படுத்துகிறது.

புதிய கட்டிடம் திறக்கப்படாததற்கு ஜெயலலிதாவே காரணம். காலதாமதத்திற்கு திமுக அரசு பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இக்கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக ஆகிவிடவில்லை என்பதையும், வக்ஃபு வாரியம் இந்த அலுவலகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு முன்னாள் முதல்வர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பொய்யான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனிமேலாவது அவர் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் ஹைதர் அலி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X