ஒரிசாவில் ஆயுதங்களைக் கொள்ளையடித்த சுந்தரமூர்த்தி!
சென்னை: ஒரிசாவில் உள்ள ஆயுதக் கிட்டங்கியில், இரண்டு போலீஸாரைக் கொன்று விட்டு அங்கு பெருமளவிலான ஆயுதங்களைக் கொள்ளையடித்ததாக போலீஸ் பிடியில் சிக்கியுள்ள பிரபல நக்சலைட் தலைவன் சுந்தரமூர்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழக போலீஸாரால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்தவர் சுந்தரமூர்த்திய பிரபலமான நக்சலைட் தலைவரான சுந்தரமூர்த்தி கடந்த மாதம் 9ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் கூட்டாளிகள் இருவரும் சிக்கினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மலைப் பகுதியில் நக்சலைட் பயிற்சி முகாமை அமைக்க நடந்த முயற்சியில் சுந்தரமூர்த்திதான் பின்புலமாக இருந்தார். தேனி மாவட்ட நக்சலைட் நடமாட்டத்தை ஒழிக்க போலீஸார் நடத்தி வந்த அதிரடி வேட்டையில்தான் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் சிக்கினர்.
கடந்த 16ம் தேதி சுந்தரமூர்த்தியை 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் சுந்தரமூர்த்தி.
தனது வாக்குமூலத்தில் சுந்தரமூர்த்தி கூறியுள்ளதாவது:
கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி 12 மாநிலத்தை சேர்ந்த நக்சலைட்டுகள் ஒரிசாவில் கூடினோம். அப்போது ஒரிசா மாநிலம், கோராபுட் மாவட்டத்தில் இருக்கும் ஆயுதக் கிடங்கை கொள்ளையடிக்க திட்டம் போட்டோம்.
திட்டமிட்டபடி அங்கு சென்றோம். அங்கு ஆயுதக்கிடங்கில் காவல் பணியில் இருந்த ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் இன்னொரு போலீஸ்காரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து, போலீசாரின் லாரியிலேயே எடுத்துச் சென்றோம்.
500க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 60 ஆயிரம் குண்டுகள் கொள்ளையடித்தோம். பின்னர் அவற்றை எங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொண்டோம்.
ஒரிசாவில் கொள்ளையடித்த ஆயுதங்களைத்தான் பெரியகுளம் மலைப்பகுதியில் பயன்படுத்தினோம். எங்கள் திட்டம் நிறைவேறும் முன் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இங்கு நடமாடி வந்த ஆயுதங்களை தமிழக போலீஸார் பறித்திருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ஆயுதங்ளை அவர்களால் பறிமுதல் செய்ய முடியாது. எங்களையும் முறியடிக்க முடியாது என்று கூறியுள்ளார் சுந்தரமூர்த்தி.
பின்னர் சுந்தரமூர்த்தியை தர்மபுரிக்கு அழைத்துச் சென்ற போலீஸார், புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களைக் காட்டுமாறு கூறினர். அதன்படி சுந்தரமூர்த்தி ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்களை அடையாளம் காட்டினார்.
அங்கிருந்து 303 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 குண்டுகள், 315 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 9 குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணை முடிவடைந்த பின்னர் சுந்தரமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


Click it and Unblock the Notifications
