ஓணம்: கருணாநிதி, ஜெ. வாழ்த்து
சென்னை:ஓணம் பண்டிகையையொட்டி மலையாளிகளுக்கு தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள செய்தியில், சகோதரத்துவும், வளர்ச்சி, மத ஒற்றுமை, அமைதியை ஏற்படுத்த இந்த பண்டிகை உதவட்டும், நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபட இது உதவட்டும் என்று கூறியுள்ளார்.
![]() |
முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அறுவடைத் திருநாளான ஓணம், அன்பு, அமைதி, சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
கடந்த ஆண்டு மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டது. இந்த ஆண்டு முதல் சென்னையிலும் அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனில் மட்டும் இந்த அரசு அக்கறை செலுத்தாமல், அண்டை மாநில மக்களின் நலனிலும் தகுந்த அக்கறை செலுத்துகிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், மதம், ஜாதிப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மலையாளிகளாலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு ஓணம் சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.
வரவேற்கும் அத்தப்பூ கோலம்:
இதற்கிடையே நாளை கொண்டாடப்படவுள்ள ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மலையாள மொழி பேசுவோர் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுதவிர கேரள மாநிலத்தையொட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டப் பகுதிகளிலும் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகின்றன. ஓணத்தைக் கொண்டாடுவோர் இல்லங்கள் முன்பு அத்தப்பூ கோலம் அலங்காரம் பூண்டுக் காணப்படுகிறது.
மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் இடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 20-க்கும் மேற்பட்ட வகை வகையான மலர்களால் போடப்படும் அத்தப்பூ கோலம் மிகவும் பிரசித்தி பெற்றது, ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமும் ஆகும்.













Click it and Unblock the Notifications