கொல்ல முயற்சி - மாமனார், மாமியார் மீதுகணவருடன் வந்து புகார் கொடுத்த பெண்
சென்னை:எரித்துக் கொலை செய்ய முயன்ற மாமனார், மாமியார் உள்ளிட்டோர் மீது, பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகள் ஜெயலட்சுமி (25). இவர்களது உறவினர் வீடு ஆந்திர மாநிலம் கீழ்திருப்பதியில் உள்ளது. ஜெயலட்சுமி உறவினர் வீட்டிற்கு செல்லும் போது அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (29) என்பவரின் காதல் வலையில் விழுந்துள்ளார்.
சுப்ரமணி, ஜெயலட்சுமி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வீட்டினர் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு வெளியேறிய, ஜெயலட்சுமி, கடந்த 2003ம் ஆண்டு சுப்ரமணியத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு கீழ் திருப்பதியில் ஜெயலட்சுமியும், சுப்ரமணியும் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு ரோகித் (3), ஈஸ்வர் (1) என 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமியிடம், மாமனார் ராமமூர்த்தி, மாமியார் முனிரத்தினம், கணவரின் அண்ணன் ஜெயகிருஷ்ணன், அவரது மனைவி சுமலதா, தம்பி வெங்கடமுனி ஆகிய 5 பேரும் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
கடந்த 17ம் தேதி சுப்பிரமணி வெளியே சென்றிருந்த போது ஜெயலட்சுமி மீது மண்ணெண்ணை ஊற்றி உயிருடன் எரித்துக் கொல்லவும் முயன்றுள்ளனர்.
ஆனால் ஜெயலட்சுமி அவர்களிடம் இருந்து தப்பி கீழ் திருப்பதி வந்து, போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதையடுத்து திரும்பிச் சென்ற ஜெயலட்சுமி, தனது கணவருடன் வந்து மாமனார், மாமியார் உள்பட 5 பேர் மீது மீண்டும் புகார் செய்தார். ஆனாலும் போலீசார் புகாரை வாங்கவில்லை.
ஆனால் சுப்ரமணியின் அண்ணன் ஜெயகிருஷ்ணன், சுப்ரமணி மீது பொய்யாக புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் படு சுறுசுறுப்பாக செயல்பட்டுள்ளனர்.
சுப்ரமணியை காவல் நிலையத்தில் 6 நாட்கள் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த ஜெயலட்சுமி, சென்னையில் உள்ள தனது தாயாரிடம் தெரிவித்தார். பதறிப் போன ஜெயலட்சுமியின் தாயார் தேவிகா, தமிழ்நாடு மகளிர் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் ரங்கநாயகியை அணுகினார்.
அவரது உதவியுடன் சுப்ரமணி போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தனது கணவருடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஜெயலட்சுமி, கணவர் வீட்டார் மீது புகார் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications