தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் இல்லை-டிஜிபி
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் எதுவும் இல்லை. இதுபோன்ற வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டின் வேறு எந்த மாநிலங்களையும் விட தமிழகம் மிகவும் பாதுகாப்பாக, அமைதியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் காவல்துறை உஷாராக உள்ளது. பண்டிகை காலங்களில் பொதுவான எச்சரிக்கையை மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுகளுக்கு பிறப்பிப்பது சாதாரணமானதுதான்.
ஆனால் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் உண்மை இல்லை. தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் நிச்சயமாக இல்லை.
இதுகுறித்து வதந்திகளைப் பரப்புவோர், பீதியைப் பரப்பும் வகையில் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்களின் எண்ணிக்கை கணக்கு எடுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்படும்.
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்கள் வருவதால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருகின்றனர் என்றார் ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications