நெல்லை, குமரியை பிரித்து மதுரைbr/கோட்டத்துடன் இணைக்க வேண்டும் - விஜயகாந்த்
சென்னை:
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் ரயில் கோட்டத்துடன் இணைந்திருக்கும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளைப் பிரித்து மதுரைக் கோட்டத்துடன் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், சேலம் கோட்டம் அமைவதை கேரளா எதிர்த்து வருகிறது. பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள சிறிய பகுதியைப் பிரித்துத்தான் இந்த கோட்டம் அமைக்கப்படுகிறது.
ஆனால் கேரளாவின் திருவனந்தபுரம் கோட்டத்தில், தமிழகத்தின் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் பெருமளவு வருவாயை கேரளா அனுபவித்து வருகிறது.
எனவே இந்த பகுதிகளைப் பிரித்து மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ மாணவர்களின் படிப்புக் காலத்தை கூட்டுவது தவறானது. மேலும் கட்டாய கிராம சேவையையும் திணிப்பதும் தேவையற்றது. வேண்டுமானால் முதலில் மாணவர்களுக்கு நிரந்தர வேலைக்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும். அதன் பின்னர் கட்டாய கிராம சேவை குறித்து வலியுறுத்தலாம்.
மேலும், மருத்துவப் படிப்பின் கடைசி ஒரு ஆண்டை கிராமப் புற சேவைக்கு ஒதுக்கலாம் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications