ஏரி உடைந்து ஒசூர் ரோட்டில் பெரும் வெள்ளம்:br/பெங்களூர் ஸ்தம்பித்தது
பெங்களூர்:
பெங்களூரில் ஏரி உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. தமிழகத்தில் இருந்து பெங்களூர் வரும் வாகனங்கள் மணிக்கணக்கில் தாமதமாக ஊர்ந்து சென்றவண்ணம் உள்ளன.
பெங்களூர் நகரிலும் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து கொண்டுள்ளது. இதில் நகரைச் சுற்றியுள்ள பல ஏரிகளும் நிரம்பிவிட்டன.
மடிவாளா பகுதியில் உள்ள ஏரி நிரம்பி நேற்றிரவு உடைந்தது. இதிலிருந்து வெளியேறிய வெள்ள நீர் ஓசூர் ரோடு மற்றும் பிடிஎம் ரோடு பகுதிகளில் புகுந்துவிட்டது.
பொம்மனஹள்ளி-மடிவாளா அருகே சென்ட்ரல் சில்க் போர்ட் மேம்பால சந்திப்பில் இந்த நீர் சாலையை தாண்டி ஓடிக் கொண்டுள்ளது. இதனால் ஒசூர் ரோட்டின் இரு புறமும் இடுப்பளவு வெள்ள நீரில் வாகனங்கள் மிதந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நகரின் முக்கிய சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைந்துள்ள எலெக்ட்ரானிக் சிட்டிக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
இந்தப் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பின் தொடர்ச்சியாக நகரின் பல பகுதிகளும் போக்குவரத்து சிக்கலில் மாட்டின. கோரமங்களா, பிடிஎம் லே அவுட், எச்எஸ்ஆர் லே அவுட், பொம்மனஹள்ளி, பொம்மசந்திரா, எலெக்ட்ரானிக் சிட்டி, ஜேபி நகர், ஜெயநகர், ஆடுகோடி ஆகிய பகுதிகள் அடங்கிய நகரின் ஒரு பகுதியே ஸ்தம்பித்துப் போய்விட்டது.
இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் ஓசூர் ரோட்டில் சிக்கித் தவித்தன.
ஓசூரில் இருந்து 45 நிமிடத்தில் பெங்களூர் பஸ் நிலையத்தை அடைய வேண்டிய வாகனங்கள் 4 முதல் 5 மணி நேரம் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒசூர் ரோட்டில் கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள் நிற்கின்றன. பல வாகனங்கள் ஏரி நீரில் சிக்கி ஆப் ஆகி ஆங்காங்கே நின்றுள்ளன. இதில் பல தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களும் அடக்கம்.












Click it and Unblock the Notifications