பல அவதார திருமண மோசடி: 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியவர் கைது!
சென்னை:
பிரபல திருமண இணையதளம் மூலம் பல்வேறு பெயர்களில் விளம்பரம் செய்து 50க்கும் மேற்பட்ட பெண்களை ஒரு நபர் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
திருமண இணையதளம் ஒன்றில் திருச்சி பாலக்கரையை சேர்ந்த லியாகத் அலிகான்(32) என்பவர் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளார். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஷபானா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
திருச்சியில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் லியாகத் அலிகான் பல புனைப் பெயர்களில் இந்த இணையதளத்தில் தனது புகைப்படத்தை கொடுத்து மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.
சந்தீப் ஐஏஎஸ் (அமெரிக்கா), சுதாகர் ஐபிஎஸ், ராஜேஷ்குமார் எம்.இ(லண்டன்) என்று பெயர்களை மாற்றி தனது வயதையும் குறைத்து அந்த இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
இந்த விளம்பரங்களைப் பார்த்த பல இளம் பெண்கள் லியாகத் அலிகானை தொடர்பு கொண்டுள்ளனர். அந்தப் பெண்களின் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக உறுதியளித்துள்ளார். பின்னர் அந்தப் பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
வெளிநாட்டு வாழ்க்கை தேடி வருவதையடுத்து பல பெண்கள் லியாகத்துடன் பழகியுள்ளார். அதில் தங்களது கற்பையும் இழந்துள்ளனர்.
இதுதவிர, அந்தப் பெண்களின் வீட்டாரிடமிருந்து விசா எடுக்க என்று கூறி பல லட்சம் பணத்தையும் கறந்துள்ளார் லியாகத் அலிகான்.
இந்த நிலையில்தான் லியாகத் அலிகானின் மோசடியை உணர்ந்த சங்கீதா என்ற திண்டுக்கல் பெண் போலீஸில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், திருமண இணைய தளத்தில் விளம்பரம் செய்திருந்தோம். அதைப் பார்த்து லண்டனில் சாப்ட்வேர் இன்ஜீனியராக வேலை பார்க்கும் ராஜேஷ்குமார் (29) என்பவர் என்னை தொடர்பு கொண்டார். இருவரும் ஆன்லைன் மூலம் சாட்டிங் செய்து, எங்களுடைய விவரங்களை பகிர்ந்து கொண்டோம்.
என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறினார். சென்னைக்கு வந்துள்ளதாகக் கூறிய அவரை எனது உறவினர் ஒருவர் சந்தித்துப் பேசினார். பின்னர் திருமண சம்பிராதயங்கள் பேசி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் என்னை காரில் பல இடங்களுக்கு அழைத்து சென்றார். கணவராக வரப் போகிறவர் என்ற எண்ணத்தில் நான் அவருடன் உல்லாசமாக இருந்தேன்.
திருமணத்திற்கு முன்பு, லண்டன் செல்ல விசா, பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து ரெடியாக வைத்துக் கொள்வோம் என்று சொல்லி ரூ. 1.50 லட்சம் பணத்தை வாங்கிச் சென்றவர் இன்று வரை வரவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதற்கிடையில் புளியந்தோப்பு பகுதியில் அவர் தங்கியிருப்பது தெரிந்து அவரிடம் நானும், எங்களது உறவினரும் சென்றோம். ஆனால் அவர் எங்களை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி பணம் பறித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் சங்கீதா தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் இணை போலீஸ் கமிஷ்னர் ரவி தலைமையில் போலீசார் நேரடியாக விசாரணையில் இறங்கி லியாகத் அலியை புளியந்தோப்பில் வைத்து கைது செய்தனர்.
போலீசார் லியாகத் அலியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தெரிவித்த பரபரப்புத் தகவல்கள்
எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் ஊத்தப்பாக்கம். எனக்கு ஏற்கனேவே திருமணம் ஆகிவிட்டது. நான் திருச்சி பாலக்கரையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் ஆரம்பித்தேன். சாட்டிங் செய்து சீமா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தேன்.
அது தவிர இன்டர்நெட் சென்டருக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவிகளை மயக்கி, உல்லாசமாக இருந்தேன். சில பெண்களை இன்டர்நெட் சென்டரிலேயே நிர்வாண படம் எடுத்து சிடியில் பதிந்தும், இணையதளம் மூலமும் விற்பனை செய்துள்ளேன்.
இது தொடர்பாக ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு திருச்சி போலீசார் என்னை கைது செய்து, இன்டர்நெட் சென்டருக்கும் சீல் வைத்துவிட்டனர். இந்த வழக்கிலிருந்து வெளியே வந்த நான் மீண்டும் இன்டர்நெட் சென்டரை துவங்கினேன்.
அப்போதுதான் இணையதளம் மூலமாக எனது போட்டோவை கொடுத்து பல பெயர்களில் பதிந்து வைத்து மணப்பெண் தேவை என்று விளம்பரம் செய்தேன். இதன் மூலம் என்னை தொடர்பு கொள்ளும் பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்தேன், பணமும் பணத்தை கறந்துள்ளேன்.
லண்டன் சாப்ட்வேர் இன்ஜீனியர் என்ற பெயரில் சாட்டிங் மூலம் 20 பெண்களிடம் தொடர்பு கொண்டு அவர்களை வெளிநாடு அழைத்து செல்வதாக சொல்லி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துள்ளேன்.
பின்பு அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜீனியர் என்ற பெயரில் 10 பெண்களை ஏமாற்றினேன். இவர்களிடமும் ஏமாற்றி பணத்தை பறித்தேன்.
அதன்பிறகு சந்தீப்குமார் ஐஏஎஸ் என்ற பெயரில் கலெக்டர் வேடம் போட்டேன். இதிலும் 8 பெண்கள் சிக்கினார்கள் என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் லியாகத் அலிகான்.
லியாகத் அலிகான் இதுவரை 7 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார். 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.












Click it and Unblock the Notifications