பெங்களூர் தாக்குதல்-கருணாநிதியுடன் பிரதமர் பேச்சு
சென்னை:
கர்நாடக மாநில கூட்டணி அரசில் பாஜக அங்கம் வகிப்பதால் தமிழக பஸ் எரிக்கப்பட்டது, முதல்வர் மகள் செல்வியின் வீட்டில் நடந்த தாக்குதல் ஆகியவை தொடர்பாக கர்நாடக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் கண்டனம்:
முதல்வர் கருணாநிதியில் மகள் செல்வி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், தமிழக பஸ் எரிக்கப்பட்டதற்கும் பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதியை பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
ராமதாஸ்:
இச் சம்பவங்கள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,
ராம பக்தர்கள் என்ற போர்வையில் முதல்வரின் மகள் வீட்டின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத் தலைவர்களுக்கு எதிராக இது போன்ற தீய சக்திகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறை கிடையாது.
டெல்லியில் காமராஜரையே உயிரோடு கொளுத்த முயன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் இவர்கள். இவர்களுக்கு ராமரைப் பற்றியும் கவலையில்லை. இந்த பாலத்தைப் பற்றியும் கவலையில்லை. மத உணர்வுகளை தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்தி வேடிக்கை பார்க்க வேண்டும், ஓட்டு வாங்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்றார்.
விஜய்காந்த்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில்,
தேமுதிக இதுபோன்ற மதவெறி அரசியலை எப்போதும் அனுமதிக்காது. முதல்வர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கலாம்.
அதை விட்டுவிட்டு முதல்வரின் மகள் வீட்டின் மீது தாக்குதல் மற்றும் தமிழக பஸ்சை எரித்தது, இரு மாநில மக்களுக்கும் இடையே கசப்புணர்வுக்கும், இந்திய ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும் முயற்சி நடந்துள்ளது என்றார்.
கிருஷ்ணசாமி:
தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறுகையில்,
ராமர் பாலம் தொடர்பாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் மீது தனி மனித தாக்குதலை நடத்தி வன்முறைச் செயலை கட்டவிழ்த்து விட்டு அச்சுறுத்தும் அடாவடித்தனமான நடவடிக்கைகளில் சில மதவாத சக்திகள் இறங்கியுள்ளன.
பெங்களூரில் நடந்த இரு சம்பவங்களுக்கு காரணமான குற்றாவளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தி அவர்களது முகமூடியை கிழித்தெறிந்து உரிய தண்டனையை பெற்றுத்தர கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வரதராஜன்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறுகையில்,
கர்நாடக மாநில கூட்டணி அரசில் பாஜக அங்கம் வகிப்பதால், இந்த சம்பவங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதில் அங்குள்ள காவல்துறையும், அதிகாரிகளும் தயக்கம் காட்டுவது கண்கூடாக தெரிகிறது. இந்த வன்முறையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என்றார்.
சரத்குமார்:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில்
ஜனநாயக நாட்டில் கருத்து சொல்வதற்கு எவருக்கு உரிமை உண்டு. பெங்களூரில் நடந்த சம்பவங்களை கடுமையாக கண்டிக்கிறேன். இந்தியாவில் மதவாத, ஜாதி அரசியல் வரக்கூடாது என்பதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மிகவும் உறுதியுடன் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications