முன்னாள் எம்.எல்.ஏ. மனைவியைத் தாக்கி நகைகள் கொள்ளை - ஹெல்மட் பெண் துணிகரம்
சென்னை:
முன்னாள் பாமக எம்.எல்.ஏ. உலகரட்சகன் வீட்டுக்குள் புகுந்த ஹெல்மட் அணிந்த பெண், உலகரட்சகனின் மனைவியைத் தாக்கி மயக்கப்படுத்தி, வீட்டிலிருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினார். அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறு தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ உலகரட்சகன். இவர் தனது மனைவி அம்பிகா பெயரில், அம்பிகா கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரும் கோடீஸ்வரரான உலகரட்சகனுக்கு மனைவி அம்பிகா தவிர இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்குக் கல்யாணமாகி விட்டது.
ஒரு மகன் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இன்னொரு மகன் டாக்டருக்குப் படித்து வருகிறார்.
மனைவி, டாக்டருக்குப் படிக்கும் மகனுடன் கோடம்பாக்கம் ரத்னம்மாள் தெருவில் உள்ள ஜெயின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் உலகரட்சகன். இவரது கட்டுமான நிறுவனம் கோடம்பாக்கம் அனுசுயா தெருவில் உள்ளது.
இதய ஆபரேஷன் செய்ததால் சில நாட்களாக வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார் உலகரட்சகன். இந்த நிலையில் நேற்று அவர் அலுவலகம் வரை சென்று வருவதாக அம்பிகாவிடம் கூறி விட்டுச் சென்றார். வீட்டில் அம்பிகா மட்டும் இருந்தார்.
உலகரட்சகன் சென்ற அரை மணி நேரத்தில் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. யார் என்று பார்த்துள்ளார் அம்பிகா. அங்கு ஹெல்மட் அணிந்தபடி ஒரு பெண் நின்றுள்ளார். யார் வேண்டும் என்று அம்பிகா கேட்டபோது, அண்ணனைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் அப்பெண்.
அவர் அலுவலகம் போய் விட்டார், அங்கு போய் பாருங்கள் என்று கூறியுள்ளார் அம்பிகா. சரி என்று கூறியும் அப்பெண், தாகமாக இருக்கிறது, குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அம்பிகாவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். குடித்து முடித்த அப்பெண் இன்னும் தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டார்.
பரிதாபப்பட்ட அம்பிகா, அப்பெண்ணை வீட்டுக்குள் வந்து அமருமாறு கூறியுள்ளார். பின்னர் தண்ணீர் எடுக்க உள்ளே போனார். அப்போது அந்தப் பெண், அம்பிகாவின் பின்னாலேயே சென்று அவரை கீழே தள்ளி சரமாரியாக அடித்துள்ளார். மேலும் அம்பிகாவின் கழுத்தையும் நெரித்துள்ளார்.
இதில் நிலை குலைந்தார் அம்பிகா. இருந்தாலும் அந்தப் பெண்ணிடமிருந்து தப்ப முயற்சித்துள்ளார். ஹெல்மட் பெண்ணின் கையை பலமாக கடித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹெல்மட் பெண், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துக் குத்த முயன்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அம்பிகா தப்பினார்.
பின்னர் ஹெல்மட் பெண் சரமாரியாக அடித்ததால் மயக்கமடைந்தார் அம்பிகா. அதன் பின்னர் அந்தப் பெண், வீட்டிலிருந்த பீரோவில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டார். அம்பிகாவின் மூக்குத்தியை கழற்றப் பார்த்துள்ளார். ஆனால் அது வரவில்லை, மாறாக ரத்தம்தான் வந்தது.
அதன் பின்னர் நகை, பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய ஹெல்மட் பெண், வீட்டுக் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டுச் சென்றார். அடுக்கு மாடிக் குடியிருப்புக்குக் கீழ் காத்திருந்த ஒரு நபருடன் அவர் பைக்கில் ஏறிச் சென்று விட்டார்.
மயக்கம் தெளிந்து எழுந்து அம்பிகா பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கதவைத் தட்டி சப்தம் போட்டுள்ளார் அம்பிகா. இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவைத் திறந்து அம்பிகாவை மீட்டனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. உலகரட்சகனும் விரைந்து வந்தார். வீட்டிலிருந்த அலமாரி, பீரோ போன்றவை சூறையாடப்பட்டிருந்தன. அதில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் பணம் ஆகியவை காணவில்லை என்று போலீஸாரிடம் உலகரட்சகன் தெரிவித்தார்.
அம்பிகா வீட்டுக் கதவைத் திறந்து அவரை வெளியே மீட்ட சிலர் கூறுகையில், யாரும் சந்தேகத்திற்கிடமான வகையில் இங்கு நடமாடியதாகத் தெரியவில்லை. அம்பிகாவின் குரல் கேட்டு ஓடி வந்து கதவைத் திறந்தோம் என்று தெரிவித்தனர்.
இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications